வியாழன், 9 செப்டம்பர், 2010

அனாமிகாக்கள்..!

தற்செயலாக பொதிகை அலைவரிசையில் ஒரு ஆவணப்படம் பார்த்தேன்.தொட்டில் குழந்தை திட்டம் பற்றியது. ஒரு தம்பதி தங்கள் குழந்தையை 'சேர்க்க' காப்பாளரிடம் இசைவு உறுதிப்படுத்தும் காட்சிகள்.
கணவர் கல் நெஞ்சோடு உறுதியாகப்பேச, தாய் உள்ளமோ தவிக்க... நெஞ்சைப்பிசையும் சம்பவம் அது.
இந்தக்குழந்தை வளர்ந்து ஆளானதும் சந்திக்கபோகும் பிரச்சினைகள் ஏராளம்.
எனது நண்பர் ஒருவர் சமூக ஆர்வலர், சில பிரபலங்கள் ஆதரவுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை சென்னையில் பராமரிக்கும் பொறுப்பிலிருந்தார்.நானும் ஓரிருமுறை அந்த பிள்ளைகளை சந்தித்து வந்திருக்கிறேன்.பொருளுதவி செய்ய நிறைய நல்லுள்ளங்கள் இசைந்திருக்கின்றனர்.இதையெல்லாம் விட தங்கள் மீதும் அன்பு செலுத்த ஆள் இருக்கின்றனர் என்கிற உயிர்த்துடிப்பு அந்தக்கண்களில் இருப்பதை ,அவர்களை நேரில் சந்திக்கும்போது உணர்ந்தேன்.
காலப்போக்கில் நண்பர் அப்பொறுப்பிலிருந்து கனத்த மனதோடு விலகிவிட்டார் என அறிந்தேன்.விசாரித்தபோது பெண் பிள்ளைகள் வளர்ந்து பருவ வயதை அடையும் தருணங்களில் அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை, அவர்களைக்கட்டுப்படுத்தி வைப்பதில் உள்ள சிரமங்களை விவரித்தார்.
தொட்டில் குழந்தை திட்டம் துவக்கிய அரசியல் தலைவர்கள், தற்சமயம் அத்திட்டம் குறித்தெல்லாம் யோசிக்க நேரமோ,வாய்ப்போ இல்லை.இந்தக்குழந்தைகளின் எதிர்காலம் இறையருளால் சரியாக அமையவேண்டும்.
ஜெயகாந்தனின் 'நிக்கி' என்ற சிறுகதை நினைவில் வந்தது.(கதையில் வரும் கதாபாத்திரத்தோடு ஒப்பிடவில்லை, கதையின் கரு மட்டும் எண்ணிப்பாருங்கள்.)