வெள்ளி, 29 ஜனவரி, 2010

கறிமீன் பொலிச்சது...!

கறிமீன் பொலிச்சதுசெய்முறை:சின்ன வெங்காயம், வெந்தயம், கடுகு, காஷ்மீர் சில்லி பௌடர், கறிவேப்பிலை, புளி, உப்பு இவற்றை தேவைக்கு ஏற்ப அரைத்து மசாலாவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு காய்ந்த தேங்காய் எண்ணெயில் சிறிது கடுகு, கறிவேப்பிலையைப் போட்டு வறுத்தவுடன் அரைத்த கலவையைக் கொட்டி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.பின்பு,கழுவிய மீனை நன்றாக சமையல் எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டு வேக வைத்த மசாலாவில் போட்டு நன்றாக மீனைத் திருப்ப வேண்டும். இப்படித் திருப்பும் போது மசாலா வாணலியில் அதிக சூட்டில் அடுப்பிலேயே இருக்க வேண்டும்.இது முடிந்த பின்,வறுத்த மீனை எடுத்து வாழை இலையில் மடித்து எண்ணெய் இடாமல் வாணலியை சூடுபடுத்தி அதில் இந்த வாழைஇலை மீனை வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். இலை வதங்கியவுடன் அப்படியே எடுத்துப் பரிமாறினால் கறிமீன் பொலிச்சது தயார்.ஸ்பெஷல் ஐட்டங்கள் ப்ளஸ் ரேட்:1. கறி மீன் பொலிச்சது சுமார் 200 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை மீனின் நீளத்திற்கு ஏற்ப கிடைக்கும்.2. மத்தி ஃப்ரை ரூபாய் 1203. ஐலா மீன் பொலிச்சது ரூபாய் 1254. நண்டு ரோஸ்ட் ரூபாய் 1556. கொஞ்சு ஃப்ரை (எறால்) ரூபாய் 1657. கனவா மீன் ரூபாய் 160கடற்கரய்

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

இன்வெஸ்ட்மென்ட் டிப்ஸ்

சிங்கப்பூரில் வசிக்கும் நான் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு என்.ஆர்.இ. மற்றும் என்.ஆர்.ஓ. அக்கவுண்ட் உள்ளது. டீமேட் அக்கவுன்ட் ஆரம்பிக்கவும், ஷேரில் முதலீடு செய்யவும் வேறு என்ன ஆவணங்கள் தேவைப்படும்?

_ ரமேஷ் சண்முகம், சிங்கப்பூர்.

- சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்

நீங்கள் என்.ஆர்.ஐ. என்பதால் என்.ஆர்.இ. டீமேட் அக்கவுன்ட், எஸ்.பி. அக்கவுன்ட், பி.ஐ.எஸ். எனப்படும் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்மென்ட் ஸ்கீம் (இது ஆர்.பி.ஐ. ஒப்புதல்- வங்கி மூலம் வழங்கப்படும்), டிரேடிங் அக்கவுன்ட் ஆகியவை தேவைப்படும். ஷேரில் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் கூடுதலாக என்.ஆர்.ஓ. அக்கவுன்ட் தேவைப்படும். என்.ஆர்.ஓ., மற்றும் என்.ஆர்.இ. டீமேட் அக்கவுன்ட் ஆகியவற்றை புரோக்கர் மூலமாகவும் மற்றவை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்தும் பெறவேண்டும். இவை இருந்தால் நீங்கள் சிங்கப்பூரில் இருந்தபடியே ஷேரில் முதலீடு செய்யலாம்.

ஈரோடு

'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'ன்னு சொன்ன பாரதியாரை அப்படியே ஃபாலோ பண்ற ஊரு ஈரோடு. பஸ்சை விட்டு எறங்கி லாட்ஜுக்குப் போய் குளியலைப் போட்டுட்டு நகர்வலம் கிளம்பினேன். ஒருகாலத்துல விவசாயக் கொடி உசரத்துல பறந்த ஊரு. இப்ப அதுக்கு இணையா தொழில்துறையும் பட்டொளி வீசிப் பறக்குது. அதுவும் இப்பக் கொஞ்ச காலமா விவசாயத்துறையைத் தாண்டிப் போயிக்கிட்டிருக்கு தொழில்துறை. இந்த ஊர்ல முக்கிய தொழிலுன்னு பாத்தா, டெக்ஸ்டைல்ஸ், மஞ்சள், ஆயில், ஆட்டொமொபைல், என்ஜினீயரிங் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழில்கள்தான் இருக்கு

முதல்ல டெக்ஸ்டைல்ஸ் அண்ட் கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோஷியேசன் தலைவர், சுப்பிரமணியனிடம் பேசினேன்...

''ஈரோடு ஜவுளித் தொழிலுக்கு தாய்வீடு மாதிரி! எல்லா ஊர்கள்ல இருந்தும் ஃபேப்ரிக் மெட்டீரியல் ஈரோடுக்கு வருது. இங்க எல்லா வகையான பிராசஸிங் யூனிட்டும் இருக்கு. அதனால வேலைவாய்ப்புக் கொட்டிக்கிடக்குது. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி ஆளுங்க கிடைக்காததால வேற மாநிலத்துக்காரங்க அதிகமா இங்கயிருக்காங்க. இந்தியாவுல இருக்குற எல்லா மொழி பேசுறவங்களும் இங்க இருக்காங்க. குறிப்பா இந்திரா நகர்னு ஒரு ஏரியா இருக்கு. அது குட்டி இந்தியான்னே சொல்லலாம். அந்தளவுக்கு எல்லா மாநிலத்துக்காரங்களும் அங்க இருக்காங்க.

ஜவுளித் தொழில்ல நெய்வதில் ஆரம்பித்து எம்ப்ராய்டரி வரை எல்லா வேலையும் இங்க நடக்குது. மொத்தத்துல 5 லட்சம் பேருக்கு மேல நேரடியாவும், மறைமுகமாவும் வேலை பாக்குறாங்க. ஈரோடுல புடவை 50 ரூபாயிலிருந்தும், வேஷ்டி 25 ரூபாயிலிருந்தும் கிடைக்கும்.

இங்க உற்பத்தியாகி வெளியூருக்குப் போறதில்லாம, வாரா வாரம் இங்கயே துணிச் சந்தை கூடுது. விலை ரொம்ப கம்மியா இருக்கும். துணியை வாங்குறதுக்காக பல மாநிலங்களிருந்தும் வியாபாரிக வருவாங்க. ஒவ்வொரு வாரமும் மூணு கோடி ரூபாய் வரைக்கும் வியாபாரம் ஆகுது. இந்தியாவிலயே வாரச்சந்தையில இவ்வளவு வியாபாரம் ஆகுறது இங்கதான்னு நினைக்கிறேன்.

இந்த மாவட்டத்திலிருந்து நேரடி ஏற்றுமதி குறைவு. அப்படியிருந்தும் ஆண்டுக்கு 10 கோடிக்கும் மேலா இந்த மாவட்டத்திலிருந்து ஏற்றுமதியாகுது. மறைமுக ஏற்றுமதின்னு பாத்தா 15 கோடிக்கும் மேலயிருக்கும். ஈரோடுல இவ்வளவு வியாபாரம் நடந்தாலும் இங்க இருக்குற ஒரே பிரச்னை சாயக்கழிவுதான். இதைச் சரிசெய்ய அரசோட ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. அது நடந்தா தொழில் இன்னும் வளரும்''னு கோரிக்கையோட முடிச்சுகிட்டார்.

டெக்ஸ்டைல்ஸ் துறையில ஈரோடு தனி முத்திரை பதிச்சதுக்கு லுங்கி தயாரிப்பும் ஒரு காரணம்னு சொல்றாங்க. “ஒரு காலத்துல ஈரோட்ல மட்டுந்தான் லுங்கி தயாரிப்பு நடந்துச்சு. இந்தியா முழுசுக்கும் இங்கிருந்துதான் லுங்கி போயிகிட்டிருந்துச்சு. இப்ப கொஞ்சக் காலமாத்தான் அகமதாபாத், நாக்பூர் மாதிரியான வடமாநிலங்கள்ல தயாரிக்குறாங்க. லுங்கி இங்கிருந்து அதிகமா ஆந்திரா, கேரளாவுக்குதான் போகுது. லுங்கித் தொழில்ல மட்டும் ஈரோட்டுல தோராயமா வருஷத்துக்கு 600 கோடி ரூபாய் வியாபாரம் நடக்கும். ஏற்றுமதின்னு பாத்தா இலங்கைக்கும், மலேசியா, சிங்கப்பூருக்கும் அதிகமா போயிக்கிட்டிருந்துச்சு. இப்ப சமீபமா ஏற்றுமதி குறைஞ்சு போச்சு'' என்றார் முன்னணி லுங்கி தயாரிப்பாளரான பாபு.

ஜவுளிக்கு அடுத்ததா அதிகமா விற்பனையாகுற பொருள் மஞ்சள். இதைப் பத்தி மஞ்சள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிசங்கரிடம் பேசினேன்.

'' இந்தியாவில பல பகுதிகள்ல மஞ்சள் விளைஞ்சாலும், ஈரோடு மஞ்சள்தான் தரத்துல உசந்து நிக்குது. இந்த நிறம், சைஸ் மத்த மஞ்சள்ல இருக்காது. இந்தியாவுலயே இரண்டாவது பெரிய மஞ்சள் மார்க்கெட் ஈரோடு மார்க்கெட்தான். வருஷத்துக்கு 500 கோடி ரூபாய் மஞ்சள்ல மட்டும் வர்த்தகம் நடக்குது. இப்ப மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்குது. 2007 ஜனவரியில 2500 ரூபாயிக்கு வித்த ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு இப்ப 9,000 ஆயிரம் கிடைக்குது.

பொதுவா மத்த ஊர்கள்ல பணம், பொன்னு, பொருளை சேத்து வப்பாங்க. ஆனா, ஈரோடு மஞ்சள் விவசாயிக இன்னும் மஞ்சளை சேமிப்பா வச்சிட்டிருக்காங்க. அறுவடையான மஞ்சளை வீட்டுலயே சேமிச்சு வச்சுக்குவாங்க. சந்தையில நல்ல விலை வர்றப்பவோ, அவசரச் செலவுக்கோ வீட்டிலிருக்குற மஞ்சளை வித்துடுவாங்க. அவங்களைப் பொறுத்தவரைக்கும் மஞ்சள் வீட்டிலிருக்குறது, ஏ.டி.எம். மிஷினே வீட்டுல இருக்கிறமாதிரி'' என்றார்.

''ஒரு காலத்துல கடலை எண்ணெய், நல்லெண்ணைய்க்கு ஈரோடுதான் முக்கியமான மார்க்கெட். எள், நிலக்கடலை விளைச்சல் குறைஞ்சு போனதால இந்தத் தொழில் கொஞ்சம் சுணங்கிப் போச்சு. இப்ப ஈரோடு சுத்து வட்டாரப் பகுதிகளுக்கு இந்தத் தொழில் நகர்ந்துடுச்சு. இப்ப கொப்பரை, சூரியகாந்தி, பருத்திக் கொட்டை, அரிசியிலிருந்தும் ஆயில் எடுக்குறாங்க.

கல்வியைப் பொறுத்தவரைக்கும் நல்லாயிருக்கு. ஆனா மத்திய, மாநில அரசுகளோட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லாதது ஒரு குறையா இருக்கு. ஈரோட்ல எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தாலும், ஐ.டி. துறையைச் சேர்ந்தவங்க வர்றதுக்கு தயக்கம் காட்டுறாங்க. மத்திய அரசோட அலுவலகங்கள் இங்க அதிகமா வந்தாத்தான் ஐ.டி துறையும் கொஞ்சம், கொஞ்சமா வரும்.'' என்றார் சி.ஐ.ஐ. (இந்திய தொழில்கள் கூட்டமைப்பு) மாவட்டத் தலைவர் வெங்கடேசன்.

''மஞ்சள் விவசாயத்துக்காக அரசு ஆரம்பிச்ச ரெகுலேட்டர் மார்க்கெட் சரியா நடக்குறதில்லை. விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வியாபாரிகள் என அனைவரும் ஒன்று கூடி நாகர்கோவிலில் இருக்குற அப்டா மார்க்கெட் மாதிரியான ஒரு சந்தையை ஏற்படுத்துற முயற்சி நடந்துகிட்டிருக்கு'' என்றார் வேளாண் அங்காடிகள் மேம்பாட்டு மன்றத்தின் பொருளாளர் நல்லுசாமி.

இந்த ஊர்ல மஞ்சளுக்கு அடுத்தபடியா கரும்பு, நெல், வாழைன்னு பயிர் பண்றாங்க. மாவட்டத்துல மூணு சர்க்கரை ஆலைக இருக்குது. இவ்வளவு தொழில்கள் இருக்குறதால இந்த ஊர் ஜனங்ககிட்ட தாராளமா காசு புரளுது. ஆனா, பொழுதுபோக்க இந்த ஊர்ல டாஸ்மாக், சினிமா தியேட்டரை விட்டா வேற வழியில்லாம ரொம்பக் கஷ்டப்படுறாங்க.

இந்த ஊர் சனங்க அம்புட்டு சீக்கிரம் காசை வெளியில எடுக்குறதில்லை.பணத்தை அதிகமா நிலங்கள்லதான் முதலீடு செய்றாங்க. ஈரோட்டுல இருந்து பெருந்துறை வரைக்கும் இருக்குற ஏரியா வேகமா வளந்துகிட்டிருக்கு. நிலம், தங்கத்துக்கு அடுத்த இடத்துலதான் ஷேர்மார்க்கெட் இருக்குது. நல்லா உழைச்சுச் சம்பாதிக்குற ஜனங்க அதிகமா இருக்குற இந்த ஊர்லதான் சீக்கிரமா பணக்காரனாக ஆசைப்படுறவங்களும் அதிகமா இருக்காங்க. உலகத்துல எந்த மூலையில புதுசா ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங் ஆரம்பிச்சாலும் அதோட ஏஜென்ட் ஈரோட்டுல நிச்சயம் இருப்பாங்க. அந்தளவுக்கு எம்.எல்.எம் பார்ட்டிக அதிகமா இருக்குற ஊர்.

கடைசியா ஷேர் மார்க்கெட் நிலவரத்தைப் பத்தி கோயமுத்தூர் கேப்பிடல் ஆபீசுல இருந்த சுரேஷ்பாபுகிட்ட கேட்டேன்...

''ஈரோடு மக்கள்கிட்ட ஷேர் மார்க்கெட் பத்துன விழிப்புணர்வு மெள்ள மெள்ள வந்துகிட்டிருக்கு. 2003-ல 10 புரோக்கர் ஆபீஸ் இருந்த இடத்துல இன்னிக்கு 100 ஆபீசுக்கு மேல இருக்கு. இந்த ஊர்ல ஷேர்ல 80 சதவிகிதம் பேர் டிரேடுலதான் ஈடுபடுறாங்க. 20 சதவிகிதம்தான் முதலீடா செய்றாங்க. கமாடிட்டி அவ்வளவா போகலை. அப்படியே பண்றவங்களும் தங்கம், வெள்ளி, பேப்பர் மாதிரி பாதுகாப்பான பொருட்கள்ல மட்டும் முதலீடு பண்றாங்க. மொத்தத்துல ஈரோட்டுல தினமும் 80 கோடிக்குக் குறையாம ஷேர் மார்க்கெட்ல பிஸினஸ் நடக்குது'' என்றார்.

மொத்தத்துல நல்ல சம்பாத்தியம்... அவசியமான செலவு... நிம்மதியான வாழ்க்கைன்னு வாழ்ந்துகிட்டிருக்காங்க ஈரோட்டு வாசிக.

- படங்கள் : ஆர்.குமரேசன், தி.விஜய்