செவ்வாய், 30 ஜூன், 2009

நம் சகோதரர்கள்

அவர்கள் உங்கள் சகோதரர்கள்
மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார்.அங்கு ஒரு சோதனை! உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட 6வயது முதல் 14வயது வரை உள்ள சிறுவர்கள் கூட்டம் வாசலை அடைத்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். "சப்தம் போடாமல் அமைதியா மெதுவா வரிசையா போகனும்" என்று குரல் கொடுத்தபடியே அவர்கள் பின்னே வந்த அப்பாஸ் தாத்தா, அழுத படியே அரைத் தூக்கத்தில் நடந்து வரும் 7வயது சிறுவனை அரவணைத்து, "அழக் கூடாது. பாத்து நட, கீழே விழந்துடுவ, உன்னை அல்லாஹ் பார்த்து கொள்வான். நான் இருக் கேன்ல" என ஆறுதல் கூறிய படி அழைத்து வந்து கொண்டிருந்தார்.அச்சிறுவர்கள் வெளியேறும் வரை கதவோரமாக காத்திருந்த அஹ்மது பாய், "என்ன அண்ணே! தம்பி புதுசா" என்று விசாரித்தார். "ஆம! தம்பி வந்து ரெண்டு நாளாச்சு. நம்மள மாதிரித்தான் பாவம்" என்று அப்பாஸ் தாத்தா சோகமாக சொன்ன போது அஹ்மது பாய் கடந்து போன கசப்பான தனது வாழ்க்கையின் பழைய பக்கங்களை புரட்ட ஆரம்பித்து விட்டார்.ஐம்பது வயதுகளை கடந்து விட்டாலும் அவர் ஐந்து வயதில் பட்ட அனாதைக் காயத்தின் வேதனை உள்ளத்திலிருந்து இன்னும் மறையவில்லை. சோகங்கள், கொடுமைகள், அரவணைப்புகள் என தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் எதையும் அவரால் மறக்கவே முடியவில்லை.
oOo
அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் தெருவில் என் வயதொத்த சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன். என் சிறிய தந்தை வருவது கண்டு மகிழ்ச்சி அடைந்த நான், அவரது வருகையில் மறைந்திருக்கும் சோகத்தை அறியாது அவருடன் வீட்டுக்கு புறப்பட்டேன். வீட்டு முன்னே கூட்டம். எல்லோரின் முகத்திலும் ஒரு வித சோகம்; மௌனம். பலர் புலம்பி அழும் காட்சி. ஒரு மணி நேர இடைவெளியில் திடீரென முளைத்த சாமியானா பந்தல். இவற்றைப் பார்த்து ஒன்றும் புரியாமலிருந்த நான், என் தாயாரை தேடி அலைந்த போது, வெள்ளைத் துணியால் போர்த்தப் பட்டு கட்டிலில் கிடத்தப் பட்டிருந்த என் தந்தைக்கு அருகில் அலங்கோலமாக அமர்ந்து உரக்க குரல் எழுப்பி அழுவதைப் பார்த்து, அவர் அருகில் சென்ற போது, "நம்மை அனாதையாக விட்டுட்டு போயிட்டாருப்பா மனுசன்" என என்னைக் கட்டிப் பிடித்து மீண்டும் அழ ஆரம்பித்து விட்ட என் தாயாரோடு சேர்ந்து, "அம்மா! அம்மா!" என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். சிறிது நேரத்தில் என் தந்தையை நல்லடக்கம் செய்து விட்டு அனைவரும் திரும்பி விட்டார்கள். அழுகையும் கண்ணீருமாய் எனது குடும்பமே அவதிப்பட்டு கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் எல்லா உறவினர்களும் போய் விட்டார்கள். நான், என் தாயார், அப்பாஸ் என மூவர் மட்டுமே தனியாக விடப் பட்டோம்.ஒரு மாத காலம் ஓடியது. என் தந்தையின் மரணத்திற்குப் பின் என் தாய் சிரித்துப் பேசியதை ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை. எப்போதும் சோகமும் கவலையும் துக்கமும் தோய்ந்த முகம். திடீரென என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு "ஓ" என அழுவது. இவையே அவர்களின் அன்றாட பணியாக மாறி விட்டது. சரியான உணவு உட்கொள்வதில்லை. பார்க்க அழகாய் இருந்த என் தாய், ஒரு மாதத்திற்குள் உணவின்றி மெலிந்து நலிந்து அலங்கோலமாக மாறி விட்டார்கள்.ஒரு நாள் மயக்கமுற்று கீழே விழுந்தே விட்டார்கள். மருத்துவர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே என் தந்தை போன இடத்திற்கு என் தாயாரும் சென்று விட்டார்கள்.
oOo
தாயாரும் மரணம் அடைந்து விட்ட பின் எங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டது. அடுத்து எங்கே யாரிடம் போய் தங்குவது என யோசிக்கத் தெரியாத வயதிலும் யோசனை செய்யத் தொடங்கி விட்டேன். சில சம்பிரதாயங்களுக்குப் பின் என் சிறிய தந்தைதான் எங்களை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த போது என் தந்தையின் நினைவு தாயின் பரிவு இவற்றை நினைத்து நினைத்து நானும் எனது அண்ணன் அப்பாஸும் அழுது கொண்டிருப்போம். என் சிறிய தந்தை தொழில் செய்ய காலையில் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். எங்களை அரவணைத்து ஆறுதல் கூறுவதற்கென்று யாரும் இல்லை. சிறிய தந்தையின் மனைவியோ ஒரு கொடூரமானவள்; பெண் உருவில் தோன்றிய பேய்; அழும் எங்களை நோக்கி ஆறுதலாகப் பேசமாட்டார்; ஏன் ஓயாமல் அழறிங்க என கண்டித்து எரிச்சலாகப் பேசி கையை ஓங்கி அடிக்க வருவார். அன்று மதியம் நேரம். காலை உணவும் சரியாக கிடைக்க வில்லை. கடுமையான பசி. வீட்டில் எல்லோரும் சாப்பிட்டப் பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். பசி தாங்க முடியாமல் என் சிறிய தந்தையின் மகன் அம்மு குட்டியின் தட்டிலிருந்து சிறிது உணவு எடுத்து சாப்பிட்டு விட்டேன். அவனோ அலற ஆரம்பித்து விட்டான். சப்தம் கேட்டு ஓடி வந்த அவனது தாய் நடந்ததை அறிந்து, ஓங்கி என் கன்னத்தில் அறைந்து, 'முளைக்கள மூணு எல விடல, அதுக்குள்ள திருட்டுத் தனத்தப் பாரு, இப்பவே புள்ள சாப்பாட்ல கை வச்சுட்டான், நாள எதுல கைய வப்பாங்களோ தெரியள" என வினாடியில் பொரிந்து தள்ளி விட்டார். அண்ணன் அப்பாஸுக்கு என்னைப் பார்த்து அழ மட்டுமே முடிந்தது. அவருக்கும் ரெண்டு அடி. திட்டு. "தம்பி பாசம் பொத்து கிட்டு வந்துருச்சு" என்று கூறியபடி, "இவங்கள எங்கயாவது அனாதப் பசங்க உள்ள இடத்திலே சேர்த்து விட்ருங்க! நமக்கு தொல்ல வேண்டாம் என்று ஆயிரம் தடவ சொன்னேன். கேட்டாரா இந்த பாவி மனுசன்" என வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விட்டு எங்கள் இருவரையும் வெளியே தள்ளி, கதவை ஓங்கி அறைந்து சாத்தி விட்டு உள்ளே போய்விட்டார் அந்தக் கொடுமைக்காரப் பெண்.
கன்னத்தில் அடித்தது வலிக்க வில்லை. ஆனால், வார்த்தைகளால் உள்ளத்தில் அடித்தது ரணமாக வலியெடுக்க ஆரம்பித்து விட்டது. என் சிறிய தந்தை வரும் வரை வெளியிலேயே குளிரில் நடுங்கியபடியே துக்கத்தோடு அமர்ந்திருந்தோம்.
நினைத்துப் பார்க்கிறேன். என் அன்புத் தாய், எனக்கு பசிக்காத நேரத்திலும் கூட என்னை சாப்பிட வைக்க எடுத்தக் கொண்ட முயற்சிகள் மறக்க முடியாதது. நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடிவா! என பாட்டு பாடி, விளையாட்டுக் காட்டி, சீக்கிரம் நீ பெரிய ஆம்பளையா வரனும்ள நல்ல பிள்ளையா இந்த ஒரு வா சோறு மட்டும் வாங்கிக்க! என ஆசை வார்த்தை கூறி, அண்ணன பாரு அண்ணனுக்கு கொடுக்கப் போறேன் என்று வேடிக்கை காட்டி சோறு ஊட்டியதை நினைத்து குளிரையும் மறந்து என் சிந்தனை சிறகடித்துப் பறந்தது.
என் சிறிய தந்தை வந்தும் வராதது மாய் பதறிப் போய் ஏன்? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன்? வெளியிலே குளிரிலே இருக்கிங்க? என்று கேட்டபடியே எங்களை உள்ளே அழைத்துச் சென்று நடந்ததை விசாரித்தறிந்து, தன் மனைவியை கண்டித்து விட்டு, அவர்கள் அனாதைகள், அவர்களை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என்று கூறி,"அனாதைகளை அடக்கு முறை செய்யாதீர்கள்" (93:9)என்ற இறைவசனத்தையும், "நபி (ஸல்) அவர்கள் 'நானும் அனாதைகளின் காப்பாளரும் சுவனத்தில் இப்படி இருப்போம்" என்று கூறிய படி தமது சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடை வெளி விட்டு) சமிக்கை செய்தார்கள்" என்ற நபி மொழியையும் எடுத்துக் கூறி தன் மனைவிக்கு உபதேசம் செய்தார்.அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஒலித்தது. அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. வேறு வழியின்றி, எங்களை அனாதைகள் இல்லத்தில் சேர்ப்பதே பாதுகாப்பானது, மேலும் எதிர் காலத்திற்கும் பயனுள்ளது என முடிவு செய்து, ஒரு குக்கிராமத்தில் ஜமால் ஆலிம் என்பவர் நல்ல முறையில் நடத்தி வரும் அனாதை இல்லத்தில் எங்களிருவரையும் சேர்த்து விட்டு, திண் பண்டங்களை கை நிறைய வாங்கித் தந்து செலவிற்கு கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு என் சிறிய தந்தை போய் விட்டார்.
oOo
புதிய இடம். அங்கே எங்களைப் போன்றே சோகங்களைச் சுமந்த பல சிறுவர்கள். ஆனால் அவர்களது முகங்களில் சோகத்தின் சாயல் அறவே தெரிய வில்லை. மட்டற்ற மகிழ்ச்சி. எப்போதும் சிரித்த முகங்கள். அவர்கள் ஜமால்; ஆலிமுடன் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். ஓரிரு வாரங்கள் ஓடின! ஜமால் ஆலிம் காட்டும் அன்பில் அரவணைப்பில் திக்கு முக்காடிப் போன நாங்கள், எங்களது உள்ளத்தில் படிந்த அனாதைக் காயத்தை சற்றே மறக்கத் தொடங்கினோம். தாயன்பு, தந்தையின் கண்டிப்பு, தேர்ந்த நேர்த்தி மிக்க ஒர் ஆசிரியரின் வழிகாட்டல் என ஜமால் ஆலிம் பழகிய விதம் பழைய நிகழ்வுகள் அனைத்தையும் முற்றிலுமாக மறக்கச் செய்து விட்டது. மற்ற சிறுவர்களோடு சேர்ந்து நாங்களும் விளையாட ஆரம்பித்து விட்டோம். ஜமால் ஆலிம் என் உள்ளத்தில் ஆழமாக இடம் பிடித்து விட்டார். ஒரு சில நிமிடங்கள் அவரைப் பிரிந்திருப்பது கடும் வேதனை அளித்தது. மாலை நேரத்தில் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ஜமால் ஆலிமுடன் நானும் ஒரு நாள் புறபட்டு விட்டேன். பஸ் பிடித்து டவுனுக்குப் போனோம். வண்டியை விட்டு இறங்கியதும்; எனக்கு சிற்றுண்டி வாங்கித் தந்த அவர், தனக்கு ஏதும் வாங்கிக் கொள்ள வில்லை. சில கடைகளில் ஏறி இறங்கினார். கடை முதலாளிகளிடம் ஏதோ பேசி விட்டு வந்தார். என்ன பேசுகிறார் என்பதை கவனிக்க விரும்பினேன். "என்னங்க பாய்! பிள்ளைங்களுக்கு நாளைக்கு சாப்பாட்டுக்கு எதுவும் இல்ல. உங்களால முடிஞ்சத கொடுங்க! அல்லாஹ் ஒங்க வியாபாரத்தில பரக்கத்து செய்வான்" என்று சொல்வது என் காதில் விழுந்தது.
"இன்னக்கி வியாபாரம் சரியில்ல. நாள வாங்க பாக்கலாம்" என்றே பலரும் பதில் சொன்னார்கள். இருபது கடைகளுக்கும் மேல் ஏறி இறங்கி இருப்பார். சில கடைகளில் "இவருக்கு வேற வேல பொளப்பு இல்லாம அலைறாரு" என எங்கள் காதுபடவே பேசிக் கொள்வதைக் கேட்ட எனக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது.
எவ்வளவு கஷ்டப்பட்டு நமது உணவிற்கு ஏற்பாடு செய்கிறார் இவர் என்பதை நேரில் பார்த்த போது அவர் மீதுள்ள மரியாதை பன்மடங்காக உயர்ந்தது. ஆனால், அவரோ இச்சிரமங்களில் எதையும் இதுவரை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை. இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப் பட்டு விட்டது. தொழுது முடித்த பின் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. அருகில் அமர்ந்திருந்த எனக்கு அவர் கேட்பது தெளிவாக காதில் விழுகிறது."இறைவா! அகிலத்தின் அதிபதியே! அனாதைகளை ஆதரிப்போனே! இதோ! உனது சன்னிதானத்தில் இரு கரம் ஏந்தி நிற்கிறேன். பெற்றோரை இழந்து என்னிடம் அடைக்கலமாகியுள்ள என் பிள்ளைகளுக்கு நாளை உணவிற்கு எதுவுமே இல்லை. நீயே அனைவருக்கும் உணவளிப்பவன். இதோ இந்த அனாதை களுக்கும் உணவளிப்பாயாக!" என உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தார். அதைக் கேட்ட எனக்கும் அழுகை வந்து விட்டது.
பிரார்த்தனையை முடித்து விட்டு வெளியே வந்த அவர், பள்ளி வாசலை ஒட்டி இருக்கும் மளிகை கடை முதலாளியைப் பார்த்து விவரம் கூறினார். அவரோ அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல், முகமலர்ந்து ஒரு மாதத்திற்கு தேவைப் படும் அளவு பொருட்களை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறி அவரே ஒரு ஆட்டோவையும் ஏற்பாடு செய்து அரிசி, பருப்பு மற்றும் மளிகை சாமான்களை ஏற்றி அனுப்பி வைத்தார். மகிழ்வோடு என்னை நோக்கிய ஜமால் ஆலிம், பார்த்தாயா மகனே! "அல்லாஹ்விடத்தில் கையேந்திக் கேட்டால் அவன் எதையும் மறுக்க மாட்டான். ஏந்திய கரங்களை வெறும் கையாக திருப்பி அனுப்ப வெட்கப்படுகிறான். எனவே, நீயும் எதைக் கேட்பதாக இருந்தாலும், அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்க வேண்டும்" என்று என் உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்து விட்டார். "இறைவா! ஜமால் ஆலிமுக்கு எச்சிரமமும் இல்லாமல் ஆக்குவாயாக! அவருக்கு எல்லா வகையிலும் துணை புரிவாயாக!" என்று நானும் எனது பங்கிற்கு பிரார்த்தனை செய்து கொண்டேன்.மறுநாள் விளையாடி முடித்து, மஃக்ரிப் தொழுது விட்டு சற்று அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது ஆலிம்சா எழுந்து உபதேசம் செய்ய ஆரம்பித்தார்: "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களை அமானிதமாக அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்திருக்கிறான். எனவே, உங்களுக்கு நேர் வழி காட்டுவது எனது கடமை. எங்கிருந்தாலும் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். எந்நேரத்திலும் தொழுகையை தவற விட்டுவிடக் கூடாது. பள்ளிவாசலில் இமாம் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுவதால் 27 மடங்கு நன்மைகள் அதிகம் உண்டு. எனவே, ஜமாஅத் தொழுகையை தவறவிட்டு விடக் கூடாது." என்று கூறி, சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார். "நீங்கள் வளர்ந்து வந்த பின் ஏழை எளியோருக்கு தர்மம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆதரவற்ற அனாதைகளை அரவணைத்து அவர்களை ஆதரிக்க வேண்டும். ஏனெனில் அனாதைகளை நாம் ஆதரிக்க வில்லையெனில் அவர்கள் கவனிப்பாரின்றி சரியான வழி காட்டல் இல்லாமல் திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம் போதை பொருள் அருந்துதல் போன்ற பெரும் சமுக விரோத செயல்களில் ஈடுபட்டு மபெரும் குற்றவாளிகளாக மாறிவிடுவதோடு, சட்டத்திற்கும் பெரும்சவாலாக திகழ்வார்கள்.மாறாக அவர்களை அரவணைத்து அன்பு செலுத்தி, சரியான-நேரான வழியினை காட்டினால், ஒழுக்கம் நிறைந்த நல்லவர்களாக, சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக, வளர்ந்து வருவார்கள். இது சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மையும் ஆகும்! அளப்பரிய இந்த நன்மையை ஒரு அனாதையின் காப்பாளர் செய்கிறார் என்பதால்தான், "அனாதைகளை ஆதரிப்போர் சுவனத்தில் என்னுடன் மிக நெருக்க மாக இருப்பார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறிவிட்டு சற்றே அமைதியானார் ஜமால் ஆலிம்.
"அனாதைகளை ஆதரிப்போர் சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று மீண்டும் உபதேசத்தை தொடர்ந்த அவர், "சில சந்தர்ப்பங்களில் அனாதைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் விட்டு சென்ற சொத்துக்களும் இருக்க வாய்ப்புண்டு. அவர்களை பராமரிப்போர் அவர்களது சொத்துக்களையும் சேர்த்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அதனை கையாடல்-கபளீகரம் செய்ய நினைப்பது, வீண் விரயமாக செலவு செய்வது, அநியாயமாக உண்பது போன்ற எந்தக் குற்றத்தையும் செய்ய நினைக்கக் கூடாது. மாறாக தமது சொத்துக்களை போன்றே அதனையும் பாதுகாத்து, அவர்கள் பருவ வயதை அடைந்து, நிர்வகிக்கும் தகுதியும் வந்த பின் அவர்கள் வசமே அச்சொத்துக்களை ஒப்படைத்து விட வேண்டும்.அனாதைகளின் சொத்துக்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என வழிகாட்டும் இறைவன், அச்சொத்துக்களை வீண் விரயம் செய்வோர், அநியாயமாக உண்போர் அடையும் தண்டனைகள் குறித்தும் குர்ஆனில் விவரித்துள்ளான். இதோ அந்த வசனங்கள்!"அனாதையின் சொத்தை அவர் பருவம் அடையும்வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்!..."(6:152) (17:34)
"அனாதைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான்" (2:220)"அனாதைகளை சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவார்கள் என பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அனாதையின் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலியாக) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங் கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்" (4:6)"அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்களின் சொத்துக்களை உங்கள் சொத்துக்களோடு சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாகும்" (4:2)
"அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர், தமது வயிறுகளில் நெருப்பையே உண்ணுகின்றனர். நரகில் அவர்கள் நுழைவார்கள்!" (4:10)அனாதைகளின் சொத்துக்கள் விவகாரத்தில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் தமது உறவுக்கார அனாதைகளின் சொத்துக்களையே அல்லாஹ்வின் அச்சமின்றி அபகரித்துக் கொள்கிறார்கள். இவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்" என்று உருக்கமாக கூறி முடித்தார் ஜமால் ஆலிம்.
oOo
அன்று அல்லாஹ்விடத்தில் ஓர் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். எனக்கும் இறைவன் செல்வத்தை வழங்கினால் அனாதைகளுக்கு அதனை வாரி வாரி வழங்க வேண்டும். ஜமால் ஆலிம் போன்றே அனாதைகளுக்கென்று வரும் எந்தப் பொருளையும் நாம் அனுபவிக்கக் கூடாது. என் போன்ற அனாதைகளுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அந்த உறுதி மொழி.படித்து வளர்ந்து ஆளாகி, சிறு தொழில் தொடங்கினேன். அண்ணன் அப்பாஸ், பத்து வருட மண வாழ்க்கைக்கு பின் மனைவி மரணம் அடைந்து விட்டதால் மறுமணம் செய்வதில் விருப்பம் இல்லாமல் மீண்டும் அனாதை இல்லத்திற்கே திரும்பி ஊதியமின்றி ஊழியம் செய்து வந்தார்.
நான் விரும்பியது போலவே அல்லாஹ் எனக்கு செல்வத்தை வாரி வழங்கி விட்டான். பெரும் தொழில் அதிபர். சமூகத்தில் பெரிய அந்தஸ்து என எல்லாம் கிடைத்தது. நான் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை செயல் படுத்தியும் வந்தேன். ஆம்! என் செல்வத்தில் பெரும்பகுதியை அனாதைகளுக்கே வாரி வாரி வழங்குகிறேன். வசூல் செய்வது என்ற எந்த சிரமமும் ஜமால் ஆலிம் அவர்களுக்கு அறவே இல்லாமலாக்கி விட்டேன். வருடங்கள் உருண்டோடின. இன்று இந்த அனாதை இல்லம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து பல அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு பெரிய நிறுவனமாக உருவாகி நல்ல முறையில் செயல்பட்டு வருகிறதே என்ற சிந்தனையில் சஞ்சரித்தபடி பள்ளிவாசல் அருகில் நின்று கொண்டிருந்த அஹ்மது பாய் அவர்களை, "என்னங்க அஹ்மது பாய் அங்கேயே நின்று விட்டீங்க! தொழுகை நேரம் முடியப் போகுது. சீக்கரம் வந்து தொழுகுங்க" என்ற பேஷ் இமாமின் சப்தம்தான் பழைய நினைவிலிருந்து மீள வைத்தது.

விரைந்து தொழுகையை நிறைவு செய்து விட்டு, தாமதத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு, மன நிறைவோடு வீடு திரும்பினார் அஹ்மது பாய் அவர்கள்.

திங்கள், 15 ஜூன், 2009

பைக் பராமரிப்பு









கார்புரேட்டர் நல்ல மைலேஜ் கிடைக்க..
பெட்ரோல் வாகனங்களுக்கு, கார்புரேட்டர் என்ற சாதனம் இதயம் போன்றது. இதுதான் காற்றையும் பெட்ரோலையும் சரியான விகிதத்தில் கலந்து இன்ஜினுக்குள் அனுப்புகிறது. இதில், இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, கேபிள் மூலம் நேரடியாக இணைக்கப்பட்டு இயக்கப்படும் (Direct Slide Carburetor) டைரக்ட் சிலைடு கார்புரேட்டர். மற்றொன்று, காற்றழுத்தம் மூலம் இயங்கும் Constant Vacuum Carburetor) சி.வி கார்புரேட்டர். கலப்பட பெட்ரோல், தூசு, அழுக்கு போன்றவற்றால் கார்புரேட்டரின் செயல்பாடு பாதிக்கப்படும். இதை முறைப்படி சர்வீஸ் செய்து வந்தால் மைலேஜ், பர்ஃபாமென்ஸ் ஆகியவை சீராக இருக்கும். மோட்டார் சைக்கிளுக்கான டைரக்ட் சிலைடு வகை கார்புரேட்டரை சர்வீஸ் செய்வது எப்படி?



1.முதலில் பெட்ரோல் டேங்கிலிருந்து வரும் பெட்ரோலை ஆஃப் செய்து, கார்புரேட்டரில் இருந்து பெட்ரோல் ட்யூப்பை அகற்றிவிடவும். கார்புரேட்டரின் கீழ்ப் பகுதியில் உள்ள டிரெய்ன் ஸ்குருவைத் தளர்த்தி, ஃப்ளோட் சேம்பரில் தேங்கி இருக்கும் பெட்ரோலையும் அகற்றுங்கள்.
2.அட்ஜஸ்டபிள் ரென்ச்-ஐ வைத்து கார்புரேட்டரின் டாப் நட்டைத் தளர்த்தவும். ஏர் ஃபில்டர் மற்றும் இன்டேக் மேனிஃபோல்டில் இணைக்கப்பட்டு இருக்கும் கார்புரேட்டரின் கிளாம்புகளைத் தளர்த்தி, கார்புரேட்டரைத் தனியாக எடுக்கவும்.

3.டாப் நட்டில் இருக்கும் ஸ்பிரிங், சிலைடு மற்றும் அத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஜெட் நீடில் ஆகியவற்றை ஆக்ஸிலரேட்டர் கேபிளுடன் கார்புரேட்டர் பாடியில் இருந்து அகற்றுங்கள்.
4.கார்புரேட்டரின் கீழ்ப் பகுதியில் உள்ள ஃப்ளோட் சேம்பரின் நான்கு ஸ்க்ரூக்களையும் அகற்றி, ஃப்ளோட் சேம்பரின் மூடியை அகற்றவும். இதில் தேங்கியுள்ள கழிவுகளைச் சுத்தம் செய்யுங்கள்.
5.உள்ளே இருக்கும் ஃப்ளோட், சிறிய பின் மூலம் பாடியில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பின்னை அகற்றி, ஃப்ளோட்டை கவனமாக தனியே எடுக்கவும். இதன் மேல் அமைந்திருக்கும் நீடில் வால்வை அது பொருந்திய இடத்தில் இருந்து அகற்றுங்கள்.
6.நீடில் மற்றும் வால்வ் சீட்டை கார்புரேட்டர் ஸ்ப்ரே அல்லது பெட்ரோல் வைத்து நன்றாகச் சுத்தம் செய்யவும். நீடில் வால்வ் மற்றும் வால்வ் சீட்டின் இடையே ஏதாவது அழுக்குகள் இருந்தால், வால்வு சரியாக மூடாமல் பெட்ரோல் ஓவர் ஃப்ளோ ஆகிவிடும். எனவே, இதை நன்கு சுத்தம் செய்து சரியாகப் பொருந்துகிறதா என்று பார்ப்பது அவசியம்.
7.மெயின் ஜெட் மற்றும் பைலட் ஜெட்களில் அடைப்பு இல்லாதவாறு கார்புரேட்டர் கிளீனிங் ஸ்ப்ரேவை உபயோகித்து சுத்தம் செய்யவும்.
8.அதேபோல், கார்புரேட்டர் வெஞ்சூரியிலும் ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்யவும்.
9.அகற்றிய கார்புரேட்டர் பாகங்களை, மீண்டும் அசெம்பிள் செய்து வாகனத்தில் பொருத்திய பிறகு, ஏர் ஸ்க்ரூ மற்றும் இன்ஜின் ஐட்லிங் ஸ்பீடு ஆகியவற்றை தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.
பாதுகாப்பு:
கார்புரேட்டரை அகற்றுவதற்குமுன்பு, இன்ஜின் நன்கு குளிர்ந்தநிலையில் இருக்க வேண்டும்.ஏனெனில், பெட்ரோல் கசிந்துசூடான இன்ஜின்மீது பட்டால்... தீவிபத்து ஏற்பட்டுவிடக்கூடும்.கார்புரேட்டரில் உள்ள சிறு சிறு பாகங்களைக் கவனமாக அகற்றி பத்திரமாக வைக்க வேண்டும்.

புதன், 10 ஜூன், 2009

இடமாறு தோற்றப்பிழை...!


நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்றும் எப்படி இருப்பது நல்லது, சிறந்தது என்று வரையறை வைத்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் எப்படி இருந்தால் சிறப்பு, நல்லது என்று ஒரு கற்பனை வடிவம் வைத்திருக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு கணமும் அந்த வரையறையுடன் ஒப்பிடப்பட்டே தீர்மானிக்கப்படுகிறது. சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்தக் கற்பனை வடிவத்துடன் ஒப்பிடப்பட்டே நம்மால் நிர்ணயிக்கப் படுகிறான். இந்தக் கற்பனை வடிவத்திற்கு முழுமையாகப் பொருந்துகிற கணமும், மனிதனும் கிடையாது என்பதால் இந்த ஒப்பீடு துன்பத்திற்கு ஆணி வேராக இருக்கிறது. இதற்கு மேலும் கூடப் போகிறோம். முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியையும், தற்போது நடக்கும் ஒரு நிகழ்வையும் ஒப்பிட ஆரம்பிக்கிறோம். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பிடும் பழக்கம் நம் இரத்தத்தில் ஊறிப் போய் விடுகிறது. அதனால் என்ன தவறு என்று கூட சிலர் கேட்கலாம். இந்த ஒப்பிடும் பழக்கத்தால் நம்மால் நடப்பதை ரசிக்க முடியாமல் போகிறது, மனிதர்களைத் தனித்தன்மையை சிலாகித்து ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது என்பதே கசப்பான உண்மை.இதோ ஒரு காட்சி: ஒரு பௌர்ணமி இரவில் ஒரு அழகான குளம் நிலவொளியில் மின்னிக் கொண்டு இருக்கிறது. சில்லென லேசான காற்று அடிக்க, தொலைவில் இருந்து ஒரு புல்லாங்குழல் இசை இனிமையாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த ரம்மியமான சூழ்நிலையை ஒருவன் குளத்தின் கரையில் இருந்து ரசித்துக் கொண்டு இருக்கிறான். அந்த நேரம் பார்த்து ஒரு அழகான வெண்ணிறப் பறவை ஆகாயத்தில் பறந்து செல்ல அதன் பிரதிபிம்பம் குளத்தின் நீரில் விழ அந்த கணம் பூரண அழகு நிறைந்த ஒரு கச்சிதமான கணமாக அமைந்து விட்டது. குளக்கரையில் இருந்தவன் மெய்மறந்து அந்தக் கணத்துடன் ஐக்கியமாகி விட்டான். அதற்குப் பிறகு தினமும் இரவு அவன் அந்தக் குளக்கரைக்குப் போக ஆரம்பித்தான். பல நாட்களில் புல்லாங்குழல் இசை கேட்கவில்லை. சில நாட்களில் நிலவொளி இல்லை. சில நாட்களில் சில்லென்ற காற்று இல்லை. அந்த அழகான வெண்ணிறப் பறவையோ பின் எந்த நாளும் குளத்தின் மீது பறக்கவே இல்லை. அவன் அந்தக் கச்சிதமான கணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்தக் குறைபாடுகள் பிரதானமாகத் தெரிய அவனால் பின் வந்த நாட்களின் இரவுகளை ரசிக்க முடியவில்லை. ஒரு நாள் அந்தக் குளத்தில் சில சிறுவர்கள் நீந்தி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இன்னொரு நாள் சில அழகான மலர்கள் நீர்பரப்பில் மிதந்து கொண்டு இருந்தன. இன்னொரு நாள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் அபூர்வமான மௌனத்தில் அந்தப் பகுதியே இருந்தது. இப்படி எத்தனையோ வித்தியாசமான, கூடுதல் அம்சங்கள் ரசிக்க இருந்தாலும் அவனால் ரசிக்க முடியவில்லை. காரணம் அவனை மெய்மறக்க வைத்த அந்த ஒரு இரவுடன் அவன் ஒவ்வொரு இரவையும் ஒப்பிட ஆரம்பித்தது தான்.எந்த ஒரு கணமும் அப்படியே திரும்ப நிகழப்போவதில்லை. அது இயற்கையின் நியதி. அப்படி நிகழும் என்று எதிர்பார்க்கும் போது, ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கும் போது மற்ற கணங்களின் தனியழகை, தனிப் பயன்பாட்டைக் காண முடியாமல் போகிறது. ஒவ்வொரு கணத்தையும் ரசியுங்கள். ஆனால் அதே போல திரும்ப வரமுடியாது என்பதை மறந்து விடாதீர்கள். அப்படி வந்து கொண்டிருக்குமானால் அதுவே நமக்கு சலித்து விடாதா? அதே போலத் தான் மனிதர்களும். ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள். உலகம் இயங்க அனைத்து வித மனிதர்களும் அவசியமானவர்கள். அதனால் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொருவரையும் அவர்கள் இயல்பின் படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒன்று கற்றுக் கொள்ள இருக்கிறது. அதற்கு மதிப்பு கொடுத்து அவர்களைஅங்கீகரியுங்கள். ஒரே மாதிரி மனிதர்கள் மட்டுமே இருந்தால் உலகம் ஸ்தம்பித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலில் கதாநாயகி கல்யாணி தன் கணவனிடம் மிக அழகாகச் சொல்வாள். "நம்ம வீட்டில பூக்கற ரோஜாப்பூ இருக்கு பாருங்க... இதை நான் ரொம்ப ரசிக்கிறேன்... நீங்களும் ரசிப்பீங்க. ஆனா யாரும் ஒரு ரோஜாப்பூவை விமரிசனம் பண்றது இல்லை. இல்லைங்களா. ஒரு ரோஜாப்பூவிலே இன்னும் ஒரு இதழ் கூட இருந்தா தேவலாம்னோ, இந்த வாசனையோட கொஞ்சம் மல்லிகை வாசமும் கலக்காம இருக்கிறது ஒரு குறைன்னோ நாம்ப நினைக்காம இருக்கறதுக்குக் காரணமே நாம்ப ரோஜாவை ரோஜாவா எடுத்துக்கறது தான். அதைப் பத்திக் கற்பனைகளோ எதிர்பார்க்கிற காரியமோ இல்லை. நாம்ப ரோஜா கிட்டே எதிர்பார்க்கிறது ஒரு ரோஜா தான். அந்த மாதிரி மனுஷாள் கிட்டயும் இருந்திட்டா... அவங்க இருக்கற மாதிரியே அவங்களை ஒப்புத்துக்கறதுன்னு இருந்தா இந்த மாதிரி பிரச்னையே இருக்காது"நம் மனதில் உள்ள வரையறைகள் கற்பனையானவை. அதற்கு ஏற்ப நிஜத்தில் எதிர்பார்க்கும் போது நாம் ஏமாற்றத்தையே சந்திக்க நேர்கிறது. அதே போல ஒரு கணத்தைப் போல இன்னொரு கணமோ, ஒருவரைப் போல இன்னொருவரோ இருக்க முடியாது என்பதையும் நாம் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நமது மனம் வழக்கம் போல ஒப்பிட்டுப் பார்க்குமானால் அது முட்டாள்தனம் என்பதை அக்கணமே உணர்ந்து தெளிய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நாம் வாழ்க்கையை ரசிக்க முடியும். சந்திக்கும் மனிதர்கள் மூலம் பலனடைய முடியும். மன அமைதி பெற முடியும்

தண்ணீர் தேசம்...!

கொள்ளை போகும் தண்ணீர்
நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.அடுத்ததாக சென்னை மாநகர மக்களின் (மேல்தட்டு, தொழிற்சாலைகள், மத்தியதர வர்க்கம் என்று வாசிக்கவும்) பகாசுர தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வயல்களின் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை சட்டப்படியாக்கினால் கோக கோலா ஆலையைப் போலவே தனியார் நிறுவனங்களும், லஞ்சமாக அரசியல்வாதிகளும் சம்பாதிக்கலாம் என்ற என்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த ஏஜென்டான உலக வங்கி திட்டம் தீட்டி மாநில அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கேள்வி. இவை இரண்டும் தண்ணீரை கூறு போட்டு விற்பதற்கு நடந்த, நடக்கப் போகிற உதாரணங்கள். இத்துடன் ஒரு கேலிக்கூத்தையும் மாநில அரசு தற்போது அரங்கேற்றி வருகிறது. கடல் நீரை குடிநீராக்குகிறேன், ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல் தவணை வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தையும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமாக அல்லாமல், தண்ணீர் விற்பனை நிறுவனமாக பிற்காலத்தில் மாற்றிவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வரிப்பணம் ஆயிரம் கோடி ரூபாயில் இந்த நாடகம் அரங்கேறுவதுதான் அவலம்.நாட்டிலுள்ள நீர்நிலைகளில் உள்ள குடிப்பதற்கு உகந்த தண்ணீர்தான் கடலில் சென்று கலக்கிறது. இதை சேகரித்து பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அதை மாசுபடுத்தி கடலுக்குள் கலக்கவிட்டு, பின்னர் அதையே சுத்திகரித்து நமக்குத் தருகிறார்களாம். இந்த நிறுவனத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டாயம் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கும் அரசியல்வாதிக்கும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.பொதுச் சொத்தான தண்ணீரை எப்படி அரசும் தனியாரும் கூட்டாக நம்மிடம் "விற்கிறார்கள்" என்பதற்கு இவை எல்லாம் தெளிவான உதாரணங்கள்.தண்ணீர் விநியோகம்இது மட்டுமில்லை. மாபெரும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே அதிகாரம் மிக்கவர்கள், வசதிமிக்கவர்களுக்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழைகள் தாகத்தில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாமே வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பெரும் விவசாயிகளுக்கு பலனளிக்கின்றன.இவ்வளவு காலம் வளங்குன்றும் வகையிலான பல்வேறு மறைமுகத் திட்டங்கள் அல்லது உள்ளூர் அரசுகளை ஊக்குவித்ததன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும், தண்ணீர் மாசுபாட்டையும் உலக வங்கி வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறையை பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பாக மாற்றும் வேலையில் உலக வங்கி ஈடுபட்டு வருகிறது. உலக தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ. 40,000,00 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது.இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று யோசிப்பவர்கள், கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்தால் எல்லாம் புரிந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்கிக் குடிப்பதைப் பற்றி யாராவது யோசித்திருப்போமா? போவோர் வருவோருக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்த, தண்ணீர் பந்தல் வைத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம். அந்த வகையிலேயே அரசு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் வரி செலுத்தும்போதும்கூட, குடிதண்ணீரை காசு கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு வாக்கில் உலகில் 250 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இன்றித் தவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.. இதில் 30 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அரசு விநியோகிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். அப்பொழுது உருவாகும் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபம் சேர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.இப்படியாக தண்ணீர் மீதான உரிமையை தனியார் மயமாக்கி, அதை ஒரு விற்பனைப் பொருள் ஆக்குவது வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று. ஏனென்றால் தண்ணீர் சுழற்சி என்பது வளங்குன்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகளை மீறி, சந்தைத் தேவைக்கேற்ப சுரண்டப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். பண்டைக் காலங்களில் இருந்தது போல தண்ணீரை பயன்படுத்துவதற்கும், சமஉரிமைப் படி பகிர்ந்து கொள்வதற்குமான உரிமை உள்ளூர் சமூகத்திடமே இருக்க வேண்டும்.தமிழகத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்குவதன் தொடக்கமாக திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் குப்பை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போல, இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 ஆம் ஆண்டு நியூ திருப்பூர் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 1273 கோடி ரூபாய் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மகிந்த்ரா-மகிந்த்ரா, யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் மகிந்த்ராவைத் தவிர மற்ற மூன்றும் பன்னாட்டு நிறுவனங்கள். காட் விதிமுறைப்படி, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் திருப்தியில்லாவிட்டாலும்கூட, ஒப்பந்தத்தை மாநகராட்சி திரும்பப் பெற முடியாது.திருப்பூர் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகி உள்ளது முதல் கட்டம். ஓனிக்ஸ்-நீல் மெட்டல் பனால்கா போன்ற குப்பையள்ளும் வியாபாரத்தைப் போலவே, இந்த குடிநீர் விநியோக வியாபாரமும் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்றுவியாதி போல் விரைவில் பரவக்கூடும்.தொழிற்சாலைகள் சுரண்டல்இதுதவிர காலங்காலமாக மக்கள், விவசாயத்தைவிட தனியார் தொழிற்சாலைகளே தண்ணீரை சுரண்டிக் கொழுத்து வருகின்றன. தண்ணீர் பொதுச் சொத்து என்ற பெயரில், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்று வருகின்றன. (ஆனால் பொதுமக்கள் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்) நீர்வள ஆதார அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இருபது ஆண்டுகளாக மாறவேயில்லை. ஆனால் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது.. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் என்றால், அவை உறிஞ்சும் தண்ணீரை மட்டும் கணக்கிடுவது முறையற்றது. தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. அந்தத் தண்ணீரை ஆறு, குளம், வாய்க்கால், ஏரி, குட்டை, கடல் என்று பார்க்கும் இடமெல்லாம் திறந்துவிட்டு "பொதுச் சேவை" செய்து கொண்டிருக்கின்றன. சராசரியாக வெளியேற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் மாசுபட்ட தண்ணீருக்கு பதிலாகவும் 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த தண்ணீரின் அளவில் 35-40 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் இதை மறைத்துவிட்டு மக்கள் பயன்படுத்துவது அதிகம், விவசாயம் பயன்படுத்துவது அதைவிட அதிகம் என்று பலரும் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தொழிற்சாலைகளுக்கும் சரி, தனிநபர்களுக்கும் சரி தண்ணீரை உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய அரசு விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். முதலாவதாக, தண்ணீர் பயன்பாட்டுக் கொள்கை என்பது பொது சுகாதாரம், தண்ணீர் கிடைக்கும்தன்மை சார்ந்தது. இரண்டாவதாக, திறன்மிக்க வகையில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலை, மக்களை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் பெறும் தண்ணீரின் அளவுக்கு ஏற்பவும், லாபத்தில் ஒரு பங்கையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படியில்லாமல், மக்களின் வரிப்பணத்தை வாரி தனியார் முதலாளிகளுக்குத் தருவதை எந்தச் சமூகமும் எதிர்த்தே நிற்கும்.தண்ணீர் உரிமைகளுக்காக போராடுவதுடன், தனிநபராக தண்ணீரை சேகரிப்பதில் நாம் நிறைய பங்காற்ற முடியும்.- ஒவ்வொரு மாதத்துக்கான தண்ணீர் கட்டணத்தை பரிசோதனை செய்யுங்கள். குடிநீர் மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதியுங்கள்..- நீங்கள் நல்ல தண்ணீரை வாட்டர் டேங்கில் ஏற்றுபவராக இருந்தால் எத்தனை முறை மோட்டார் போட்டீர்கள் என்றும், லாரி மூலம் தண்ணீர் வரவழைப்பவர் என்றால் எத்தனை டேங்க் என்றும் கணக்கெடுங்கள்.- குடிநீரையும் காசு கொடுத்து வாங்குகிறீர்களா? அதற்கு ஆகும் கட்டணத்தை கணக்கிடுங்கள்.இவற்றை எல்லாம் செய்த பிறகு, எப்படி தண்ணீரை குறைவாகப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றுங்கள்.

வியாழன், 4 ஜூன், 2009

படிக்க...சிந்திக்க...!

நன்றி : திரு.ஹரிதரன் சோமசுந்தரம்.(முன்னாள் ஸ்பிக் ஊழியர் இணையக்குழுமம்)

பணம் தேடிச் செல்லும் பாய்மரங்கள் -வளைகுடா வாழ் தமிழர்கள் பற்றிய குறிப்புகள்

'இரத்தம் தண்ணீரைவிடக் கனமானது, ஆனால் எண்ணையோ இவை இரண்டையும் விட கனமானது' என்றார் வளைகுடா பற்றி மார்க்சிய அறிஞரான பெர்ரி ஆண்டர்ஸன். பணம் இவை எல்லாவற்றையும்விட கணமானது என்ற நிதர்சனத்தை கூறுவதே இங்கு வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் நிலை என்றால் மிகையாகாது. திரைக்கடல் ஓடி திரவியம் தேட சொன்னவனுக்கு இப்பணத்தின் கனம் தெரிந்திருக்கிது. இக்கனத்தை சுமக்க வளைகுடாவிற்கு ஏகிய தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் பற்றியதான இக்குறிப்புகளினூடாக அவர்களது வாழ்நிலை மற்றும் அது இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தின்மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சிலவற்றை அவதானிக்க முயலலாம்.வளைகுடா என்பது சவுதி அரேபியா, குவைத், பஃஹ்ரைன், ஐக்கிய அரபுக் குடியரசு, கத்தர் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு புவி பரப்பாகும்। இந் நாடுகளுக்கிடையே உள்ள பாரசீக வளைகுடாவைக்கொண்டு இப்பெயர் வழங்கப்படுகிறது. 1960-ற்கு பின் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளம் இந் நாடுகளின் முகத்தையே மாற்;றி அமைத்தது. பொதுவாக பெட்ரோல் வளமிக்க நாடுகளாக இருப்பதுவே இந்நாடுகளின் பலமும் பலவீனமாகும். இந்நாடுகளை நோக்கி பிற நாட்டினர் தொழில்-ரீதியாகவும், வேலை வாய்ப்பிற்காக-வும் ஈர்க்கப்படுவதற்கும், அமேரிக்கா இந்நாடுகளை தொடர்ந்து போர்ப் பதற்றத்திற்குள் வைத்திருப்பதற்கும் இதுவே காரணம். உலகப் பொருளாதாரத்தை தீர்மாணிக்கும் நாடுகளாக இவை இருப்பதற்கு காரணமான இப்பொருளியல் வளமே, இந்நாடுகளின் அரசியலையும், அதிகார அமைப்பையும் தீர்மாணிப்பதாக உள்ளது. பாரம்பரிய அரசாட்சிமுறைகளே பெரும்பாலான வளைகுடா நாடுகளின் ஆட்சிமுறையாக இருக்கிறது। விலக்காக குவைத், கத்தார் போன்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் ஆட்சி அமைப்பில் இருந்தபோதிலும், மன்னராட்சி என்பது பிரதானமானதாக உள்ளது. சென்ற ஆண்டு முதல் சவுதி அரேபியாவும் கூட வட்டார அதிகார குழக்களை உருவாக்க தேர்தல் முiறையை கடைப்பிடிக்கத் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல் முறையில் பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதால் சவுதியின் முக்கிய நகரங்களில் ஆண்களும், பெண்களும் முதன்முறையாக அரசுக்கு எதிராக ஊர்வலம் போனார்கள். சவதியில் ஊர்வலம் போவதும் அரசுக்கு எதிரான கருத்துக்களை ஜனநாயகரீதியாக எடுத்துச் செல்லவும் முடியாத ஒரு அரசதிகார முறையே உள்ளது. இந்நாடுகளின் இத்தகைய ஆட்சிமுறையை மேற்கத்திய நாடுகள் பழமைவாதம் என்று விமர்சித்த போதிலும், இம் முறையை கட்டிக் காப்பதில் அவை தீவிரமாக இருக்கின்றன. உலகின் ஜனநாயக ஏற்றுமதியின் மொத்த வியபாரியாக தன்னை பாவித்துக் கொள்ளும் அமேரிக்கா இந்நாடுகளின் அரசாட்சியைக் கட்டிக்காப்பதற்காக தனது பாதகாப்புச்செலவில் கணிசமான தொகையை ஒதுக்குகிறது. காரணம் இந்நாடுகளின் எண்ணை வளத்தை சுரண்டுவதற்கு இத்தகைய அமைப்பே அவைகளுக்கு அவசியப்படுகின்றன. சவுதி அரேபியாவில் மட்டும் உலக எண்ணை வளத்தின் 25 சதவீதமும், ஓமனில் 10 சதவீதமும் உள்ளது. எண்ணை வளமற்ற துபாய் போன்ற நாடுகள் கட்டற்ற சர்வதேச சந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு தனது பொருளாதார வளத்தை ஈடுகட்டிக் கொள்கின்றன. சர்வதேச நிருவனங்களின் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான கடல் தளமாகவும் துபாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. துபாயின் இந்த வளர்ச்சியின் விளைவாக, வீடுகள், மணைகள் வாங்குவதற்கு அவ்வரசு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கி உள்ளது. வளைகுடா நாடுகளில் வெளிநாட்டினர் சொந்தமாக எந்த வியபாரமும் செய்யமுடியாது, துபாய் தவிர இதர நாடுகளில் சொத்தும் வாங்க முடியாது. இந்தியர்கள் உள்நாட்டினரின் பெயரிலேயே எந்த ஒரு தொழிலையும் செய்யமுடியும் என்பதால் இந்தியர்களின் முதலீடு என்பது ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பாதுகாப்பற்ற நிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் பெரும் அளவில் தொழில் தொடங்க முடியாத நிலை இருப்பதால் நட்சத்திர ஓட்டல்கள், தொழில் துறைகள், வியபார சந்தைகள் ஆகியவற்றில் பங்கீட்டாளர்களாக இருந்து கொண்டு வரும் வருமானத்தை இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், அதிகமான அந்நிய செலாவணியை இந்நாடுகளில் இருந்து இந்தியா பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.இந்நாடுகளின் போக்குவரத்து, தகவல் தொடர்பு வலைப்பின்னல், பொதுத்துறைக் கட்டிடங்கள் போன்ற அடிப்படைக்கட்டுமானத்தை உருவாக்கியது இந்திய குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவைச்சேர்ந்த தொழிலாளர்களே. இந்நாடுகளின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் இவ்வடிப்படைக் கட்டுமானங்களுக்கு வெளிநாட்டினரையே நம்பி உள்ளன. இந்திய தொழிலாளிகள் குறைந்த கூலிக்கு கிடைப்பதால், பெருமளவில் இந்திய தொழிலாளர்கள் இங்கு பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்நாடுகளின் உருவாக்கத்தி;;ல் இந்தியர்களின் பங்கு பிரதானமானது.வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியாவின் மக்கள்தொகை 2005-ன் கணக்கின்படி 26 மில்லியன், அதாவது 2 கோடியே 60 லட்சம், தமிழகத்தின் மக்கள் தொகை 6-கோடி 2 லட்சத்துடன் (2001-ன் கணக்கின்படி) ஒப்பிட்டால் இது எவ்வளவு குறைவு என்பது புரியும்। சவுதி அரேபியாவின் பரப்பளவான 22 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டருடன் தமிழக நிலப்பரப்பான 13 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டரை ஒப்பிட்டால், சவுதியின் பரந்த மக்கள் நெருக்கடியற்ற நிலையை புரிந்து கொள்ள முடியும். இதர வளைகுடாநாடுகளின் மொத்த மக்கள் தொகை 1 கோடிக்கும் குறைவானதே. இம்மனிதவளக் குறைவே வெளிநாட்டினரை பிரதானமாகக் கொண்டு இயங்கும் நாடுகளாக இந்நாடுகளை உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றவர்களின் பற்றாக்குறையால், இந்நாடுகளில் பணிபுரியும் துறைசார்ந்த இந்திய வல்லுனர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும், மொத்த இந்தியர்களின் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் 70 சதவீதமும், அலுவலகப் பணியாளர்கள் 20 சதவீதம், தொழில்துறை சார்ந்த வல்லுனர்கள் 10 சதவீதமும் உள்ளனர். வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் இந்திய அயல் உறவுத்துறை கணக்கின்படி தோராயமாக 4 மில்லியன் (அதாவது 40 லட்சம்) ஆகும். அமேரிக்காவிற்கு பிறகு இந்தியாவுடன் மிகப்பெரிய தொழில் உறவு கொண்ட நாடுகள் இவை. இந்தியப் பொருள்களை இறக்கமதி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்நாடுகள் உள்ளன. இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் எண்ணை மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகளும் இவையே. 2002-03-ல் இந்தியாவிற்கு வந்த அந்நிய செலவாணி இந்நாடுகளில் இருந்து மட்டும் 14.8 பில்லியன் டாலர் (தோராயமாக 74,000 கோடி இந்திய ரூபாய்களில்). இவற்றில் பெரும்பாலானவை தொழிலாளர்கள் மற்றும் அரைத்தொழிலாளர்களால் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது. காரணம் தனியர்களாக உள்ள இவர்கள் வரும் வருமானம் அனைத்தையும் தாய்நாட்டில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள் என்றபோதிலும், இத்தொழிலாளர்களின் நிலமை இந்நாடுகளில் மட்டுமின்றி தாய்நாட்டிலும் மோசமான நிலையிலேயே இருப்பது கண்கூடு.இங்கு பணி புரிபவர்களிடமிருந்து இந்திய அரசு பெறும் வருட அந்நிய செலவாணி 5 பில்லியன் டாலர்கள் (தோராயமாக 35,000 கோடி ரூபாய்கள்- றறற।வாநிநniளெரடயஙயவயச.உழஅ). இது மற்;ற ஐரொப்பிய, அமேரிக்க நாடுகளில் பண்புரிபவர்களின் வருமானத்தைவிட மிக அதிகமானதாக இருந்தபோதிலும் ஏனோ இந்திய அரசு வளைகுடாவில் பணிபுரியம் இந்தியர்களை பிறநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களைப்போல நடத்துவதில்லை என்று அக்டோபர் 10, 2003-ல் இந்திய பிரதமர் வாஜ்பேய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் Global Organization of People Indian Origin (GOPIO), INC டாக்டர் தாமஸ் அப்ரகாம். நிலமையும் அதுதான். பொதுவாக வளைகுடாவில் பணிபுரிபவர்கள் பற்றிய சமூக மதிப்பீடு என்பது ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிபவர்கள் மதிப்பீட்டைவிட குறைவாக இருப்பதையே காண்கிறோம். உண்மையில் இந்திய அரசுத்தரப்பிலும், வளைகுடா நாடுகளின் அரசுத்தரப்பிலும் பாதுகாப்பற்ற ஒரு வாழ்க்கையே வளைகுடாவில் வாழும் இந்தியர்களின் நித்hசனம். சர்வதேச விதிமுறைகளை எதுவும் பின்பற்றாத, மனித உரிமை மீறல்களையும் கொண்ட ஒரு பணியிடத்தையே இந்நாடுகளில் நாம் எதிர்கொள்கிறோம். வளைகுடா வாழ்க்கை என்பது உடல் உழைப்பாளர்களாக இருக்கும் தொழிலாளிகளுக்கு ஓர் மலர்படுக்கை அல்ல. ஒரு அறைக்குள் குறைந்தது 4 பேர்கள் தங்கும் சுகாதாரமற்ற இறுக்கமான வாழிடங்கள். 10-மணிநேர கடின உழைப்பு போன்ற பிரச்சனைகள் பொதுவாக இருப்பதை மிகச்சரியாக சுட்டிக்காட்டுகிறது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கையும்.வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள் பற்றிய இந்தியர்களின் பார்வையும்கூட மேற்கத்திய நாடுகள் அரேபிய சமூகங்கள்பற்றி கட்டமைத்துள்ள ஒரு பார்வையே நிலவுகிறது. அதாவது நாகரீகமற்ற, படிப்பறிவற்ற, முன்கோபம் கொண்ட முரட்டுத்தனமான கீழைத்தேயர்கள். இப்பார்வை மேற்கத்திய நாடு;களில் பணிபுரிபவர்-களுக்கு கீழ்நிலையான ஒரு மதிப்பீட்டை வளைகுடாவில் பணிபுரிபவர்களுக்கு வழங்குவதாகிறது.. இது 'மேற்கத்தியம்' தன்னை உருவாக்கிக்கொள்ள கடந்த சில நூற்றாண்டுகளாக உருவாக்கிய ஒரு அரசியல் பார்வையாகும். இப்பார்வைக்கு இந்தியர்களான நாமும் பலியாகியிருப்பதையே இது காட்டுகிறது. மேற்கத்திய நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகள் ஒரு பண்புரீதியான மாற்றத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது, இங்கு நிற வேறுபாடு பார்க்கப்படுவதில்லை. வெளிநாட்டினர் உள்ளுர்காரர் என்கிற முரண்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுவதில்லை. மேற்கத்திய மற்றும் அமேரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் வெள்ளைநிற வெறியால் ஒரு பதற்றத்திற்குள் வைக்கப்பட்டிருப்பதை ஒப்புநொக்கினால், வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் நிலை அத்தனை மோசமில்லை என்று உணரலாம்.பிரதானமாக இஸ்லாமிய மதத்தைக்கொண்டதாக இருந்தாலும் இந்நாடுகளில் பிற மதங்கள் மீது ஒரு நிருவனரீதியான வன்முறை என்பது இல்லை। பிற மதத்துவேஷம் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாடாக சில இடங்களில் வெளிப்பட்ட போதிலும் அது ஒரு பிரதானபோக்காக இல்லை। உண்மையில் இந்நாடுகள் இஸ்லாம் மதத்தை ஒரு ஆதிக்க கருத்தியலாக பின்பற்றகின்றனவே தவிர இந்தியர்கள் நினைப்பதைப்போல இஸ்லாமையோ அம்மதத்தினரையோ பாதுகாப்பது இவற்றின் நோக்கம் அல்ல. பாலஸ்தீனம், ஈராக் மற்றும் ஆப்கான் பிரச்சனைகளில் இந்நாடுகள் குறைந்தபட்ச மனிதநேய நிலைப்பாட்டையோ அல்லது அந்நாடுகளில் கொல்லப்படுவது இஸ்லாமியர்கள் என்பதற்காகவேனும் குறைந்தபட்சம் மதரீதியான நிலைப்பாட்டையோ எடுக்கவில்லை என்பதும் இவற்றின் மத அபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்நாடுகள் தன்னை பாதுகாத்துக்கொள்ளக்கூட அமேரிக்காவின் உதவியை நாடும் சுயச்சார்பற்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன என்பது மற்றொமொரு அரசியல் உண்மை. இந்நாடுகள் தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கு சுயச்சார்புள்ள பாதுகாப்பிற்கான தொழிற்கூடங்களைக்கூட உருவாக்கிகொள்ளவில்லை என்பதே யதார்த்தம். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் இந்து மதத்தை சேர்ந்தவர்களிடையே ஆதாரமற்ற பதற்றமும், ஒரு அச்சமும் நிலவுகிறது। இவ்வச்சம் அடிப்படையற்றது என்றாலும் இது வாய்வழிக் கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்டதாகவே உள்ளது. இக்கதைகள் புழங்காத பொது இடங்களோ அறைகளோ குறைவு எனலாம். அதுபோன்றே இந்தியாவிலிருந்து வரும் இஸ்லாமியர்கிளிடையே ஒரு ஆதாரமற்ற பெருமிதமும் நிலவுவதை பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் பெரும்பாண்மை மற்றும் சிறுபாண்மை அரசியல் கணக்கீடுகள் இந்நாட்டில் எதிர்மறையாக அமைந்திருப்பது மட்டுமின்றி இஸ்லாமியர்களுக்கான நாடு என்கிற கருத்தாக்கம் தரும் பாதுகாப்பு எனலாம். இந்த மனமுரண் உருவாக்கும் இறுக்கம் அல்லது எதிர்-உணர்வானது இவர்களை மத அடிப்படைவாதிகாளாக மாற்ற முனைகிறது. வளைகுடாவிலிருந்து குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து வரும் இந்தியர்களிடையே இந்த மனநிலையின் தாக்கத்தை உணரமுடியும். இது இந்திய இந்து மற்றும் இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகளை வளர்த்துவிட ஏதுவாகிறது. வளைகுடாவில் வாழும் தமிழர்கள் பற்றியும் அவர்களால் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பாக அதாவது வளைகுடா தமிழர்கள் பற்றிய ஒரு தனிச்சிறப்பான சித்திரத்தை காட்டும் முகமான நிகழ்வுகளை தொகுக்க முடியாததற்கு இரண்டு காரணங்களைச் சுட்ட முடியும்। 1. அத்தகைய நிகழ்வுகள் பெருவாரியாக நடைபெறுவதில்லை. 2. அப்படி நடக்கக்கூடிய நிகழ்வுகளை தொகுப்பதறக்கான தரவுகள் மற்றும் தொடர்புகளும் அரிதாகவே காணப்படுகிறது. இங்கு இணையத் தரவுகள்வழிப் பெற்ற சில குறிப்புகள் இந்நாடுகளை அருகில் சென்று அறிந்து கொள்ள உதவும். இந்நாடுகளில் மிகப்பெரிய பரப்பையும், வளத்தையும் கொண்டது சவூதி அரேபியா। இங்கு மட்டும் பணிப்புரியும் இந்தியர்கள் எண்ணிக்கை 2001-ன் கணக்கின்படி 15 லட்சம். இது சவுதி மக்கள் தொகையில் 7 சதவீதம் ஆகும். தற்போது இது பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. வளைகுடா நாடுகளிலேயே மிக அதிகமான இந்தியர்களைக் கொண்ட நாடு இது. இந்தியாவிற்கு மட்டும் இந்நாட்டிலிருந்து வரும் வருட அந்நிய செலாவனி 4 பில்லியன் அமேரிக்கன் டாலர் (சுமார் 2,000 கோடி ரூபாய்). இது ஒரு தனிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் தொகைகளிலேயே அதிகபட்ச தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்பாட்டு நிகழ்வுகள், ஒருங்குகூடல், பண்டிகை கொண்டாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகள் பிற வளைகுடா நாடுகள் போல சவுதி அரேபியாவில் இல்லை என்பதும் மற்றொரு காரணம், சம்பாரிக்கும் பணத்தை அப்படியே இந்தியாவிற்கு அனுப்புவதற்கு. இஸ்லாம் தவிர்த்த எல்லா பொது நிகழ்வுகளும் தூதரக வளாகத்தில் நடைபெறு-வதைத்தவிர பிற பொது இடங்களில் நடைபெறுவதில்லை. இலக்கியமன்றங்களும், நிகழ்வுகளும் சாத்தியமற்ற நிலையில் இலக்கியம் சார்ந்த நபர்களை கண்டடைவதும் சாத்தியமற்ற நிலையே உள்ளது. தமிழர்களுக்கு என்று இலக்கிய சங்கங்கள் இருந்தபோதிலும் அதன் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவின் 50-வது பொன்விழா ஆண்டை, மற்ற மொழிச்சங்கங்கள் ஒரு விழாவாக கொண்டாடியபோது, தமிழர்கள் மட்டும் இரண்டு சங்கங்களாக இரண்டு விழாக்காளாக கொண்டாடிய தமிழின தேசிய ஓருமைப்பாட்டை என்னவென்று சொல்வது. சவுதி அரேபியா அரசதிகார அமைப்பும் மத அதிகார அமைப்பும் 3-விஷயங்களில் தனது கண்காணிப்பை குவிமையப்படுத்தியுள்ளது। 1. கம்யூணிஸம் 2. செக்ஸ்வாலிட்டி 3. பிறமத வழிபாடுகள். இவைகள் வெளிப்படையாக மறுக்கப்பட்டிருப்பதால் செக்ஸ்வாலிட்டி மற்றும் பிற மத வழிபாடுகள் மறைமுகமாக தனது இயக்கங்களை நிகழ்த்தி வருகின்றன எனலாம். இவ்வாறு 'வெளிப்படையான காமவெளி' மறுக்கப்பட்டிருப்பதால், ஒடுக்கப்பட்ட தனிமனிதனின் பாலியல் வேட்கைகைள் பதிலீடாகஇ நீலப்படங்கள் மற்றும் இந்திய சினிமாக்கள் பார்த்தல், பாலியல் குறித்த பேச்சுக்கள் என வெளிப்பாடு கொள்ள முனைகிறது. நீலப்படங்களின் சுற்றுவட்டம் ஒரு பெரும் வலைப் பின்னலைப் போல இயக்கம் கொள்கிறது. பாலியல் ஆற்றல்களை பல பாலியில் புனைவுகளை உருவாக்கி கதைப்பதன் மூலம் தணிக்க முயல்வதால், தனியர்களின் அறைகள் புனைவுகளால் திணறுவதைக் காணலாம். அரபிகள் பற்றியும், அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்களை தவறாக பயன்படுத்துவது முதல் அரபி பிள்ளைகள் உறவுகளுக்குள்ளேக்கூட உறவு வைத்துக் கொள்வது வரையில் இக்கதைகள் புனையப்பட்டு உலாவருவதுடன், தங்களது நாட்டில் நிகழ்ந்தாக தன்னை உள்ளடக்கிய புனைவுகளையும் திரித்து பேசி மகிழ்வது என்பது இவ்வகை காம நோய்க்கு நன்மருந்தாக இருக்கிறது எனலாம்.சவுதி அரேபியாவின் தண்டனை முறை குறித்தும் நிலவும் தப்பெண்ணங்களில் ஒன்று அதன் தலைவெட்டும் தண்டணை. இது கொலை, போதைப்பொருள் விற்பனை மற்றும் வன்பாலுறவு (கற்பழிப்பு) போன்றவற்றிற்கே அளிக்கப்படுகிறது. அதுவும் மிகக்குறிப்பான ஆய்வுகளுக்கு பின்பே. குற்றவாளி மனப்பூர்வமாக ஒப்புக்கொள்தல் அல்லது சரியான நேர்சாட்சிகள் மூலம் மட்டுமே தீக்மானிக்கப்படுகிறது. இறுதி தீர்ப்பு பாதிக்கப்பட்டவரின் முடிவிற்கு விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கொலையுண்டவனின் மணைவியோ அல்லது அவனது குடும்பத்தினரோ மன்னிப்பதன் மூலம் கொலையாளி விடுதலை செய்யப்பட்டு விடுகிறான். இது வெறும் மன்னிப்புடன் முடிந்துவிடாது, 'பிளட்-மணி' (ब्लड money) எனப்படும் அரசு நிர்ணயிக்கும் தொகையோ அல்லது கொலையுண்டவனின் மணைவி அல்லது குடும்பத்தினர் கேட்கும் தொகையோ கொலை செய்தவன் ஈடாக அளிக்க வேண்டும். அத்தொகை கொலையுண்டவனின் குடு;ம்பத்திற்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.மரணதண்டனை என்பது மனிதவிரோத செயல், அதற்கான உரிமை யாருக்கும் இல்லை என்பது ஓருபுறமிருக்க, அத்தண்டணையேக்கூட பிற ஜனநாயக நாடுகளில் நடைபெறுவதைப்போலத்தான் இங்கும் நடைபெறுகிறது। சிறைக்குள் நடத்தப்படும் தூக்குதண்டனை என்பதற்கு பதிலாக இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்றி தலைவெட்டுதல் என்பது ஒரு சடங்குச்செயல் போல் பொது இடங்களில் நடத்தப்படுகிறது. சுpறைச்சாலை என்கிற சமூக கண்காணிப்பு எந்திரத்தின் ஒரு திறந்தவெளிச் செயலே இது. பிற நாடுகளில் இது சிறைக்குள் நிகழ்த்தப்படுகிறது. ஒருமுறை சவுதி தலைநகரான ரியாத்தில் ஒரு தலை வெட்டு நிகழ்வை காண நேர்ந்தது। அதற்கு முன்புவரை, எனது கற்பனையில் தலைவெட்டு நிகழ்வுபற்றி பலரிடமும் கேட்டிருந்த கதைகளே இருந்தது. அதாவது ஒரு நபரை மனிதர்கள் கூடும் ஒரு இடத்தில் வைத்து தலையை ரத்தம் சொட்ட, சொட்ட வெட்டி தொங்க விடுவார்கள். அதனை பள்ளி செல்லும் குழந்தைகளை அழைத்து வந்து காட்டுவார்கள் என்பதாக. ஆணால், நான் பார்த்தது வேறு. ஒரு மைதானம், அது இரவுகளில் குழந்தைகளும் பல குடும்பங்களும் கூடும் ஒரு பூங்காவைப்போன்ற ஒன்று. பலமுறை அதே இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்து இரவுகளில் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறேன் நான். அதன் அருகே ஒரு செயற்கை நீரூற்றும் உண்டு. இரவுகளில் வண்ண விளக்குகளுடன் அந்நீரூற்று நீரைத்தூவிக்கொண்டிருக்கும். அந்த இடம்தான் தலைவெட்டும் இடம் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். மைதானத்தில் பார்வையாளர்களான நாங்கள் நின்ற இடத்திற்கும் தலைவெட்டும் அம் மையத்திற்கும் இடையில் 100 அல்லது 150 மீட்டர் இடைவெளியிருக்கும். எங்களுக்கு முன்பாக ராணுவத்தினரின் ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அங்கு நிகழ்பவை துல்லியமாக தெரியவில்லை. முகஅடையாளம் காணமுடியாத ஒரு இடைவெளி அது. அம்மைதானத்தின் மையத்தில் நீரூற்றுக்கு அருகே, ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது। மைதானத்திற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதிலிருந்து ஒரு நபரை இறக்கினார்கள். அந்நபர் அரை மயக்கத்தில் இருந்தார். தள்ளாடிய அவரை இரு காவலர்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்து அந்நாற்காலியில் அமர்த்தினர். அவரது முகம் கருப்புத் துணியால் மூடப்பட்டது. அவரது இரண்டு கைகளையும் தனித்தனியாக ஒரு கயிற்றால் கட்டி அக்கயிரை இரண்டு மருத்துவ உதவியாளர்கள் இழுத்துப்பிடித்துக் கொண்டனர். அவரது கால்களையும் அதேபோல் இரு கயிறகளால் கட்டி இருவர் பிடித்துக் கொண்டனர். அவரைச்சுற்றிலும் காவல் உயர் அதிகாரிகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் நீதித்துறை அலுவலர்கள் என ஒரு 10 அல்லது 15 நபர்கள் நின்ற கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் ஒலிபெருக்கியில், தலைவெட்டப்படுபவரது குற்றம் மற்றும் அதற்கான தண்டனை ஆணை வாசிக்கப்பட்டது. பிறகு ஒருவர் கத்தியை அமர்ந்திருக்கும் அவரது கழுத்தின் மீது வைப்பதை பார்த்தோம். அடுத்த சில விணாடிகளில் அருகில் உள்ள ஆம்புலன்ஸ் அவரது உடலை தூக்கி வைத்துக் கொண்டு பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது. மருத்தவ உதவியாளர்கள் அவ்விடத்தை சுத்தம் செய்யத்துவங்கினர். அடுத்த அரை மணிநேரத்தில் அங்கு சிறுவர்கள் சைக்கிள் விட்டுக் கொண்டும், கால்பந்து விளையாடிக் கொண்டும் இருந்தனர். நானும் அவ்வழியைக்கடந்து எனது வேலைக்காக அருகில் உள்ள 'பத்தா'- எனும் கடைவீதிக்குச் சென்றேன். 2001-ன் கணக்கின்படி 6-லட்சம் மக்கள்தொகையைக்கொண்ட பஃஹ்ரைனில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1,30,000 ஆகும்। இது அந்நாட்டு மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். எண்ணை வளம் மட்டுமின்றி வளைகுடா நாடுகளின் மையப் பகுதியல் அமைந்திருப்-பதால் தகவல்தொடர்பிற்-கான அடிப்படைக் கட்டு-மானங்களின் மூலம் வருமானம் ஈட்டுகிறது. சில இந்தியர்கள் குடியுரிமைப் பெற்று நிரந்தரமாக இந் நாட்டில் தங்கி உள்ளனர். தேன்னிந்தியர்கள் முக்கி-யமான வியபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். 43- இந்திய சமூகப்பண்பாட்டு அமைப்புகள் இயங்கு-கின்றன. 5-இந்தியப் பள்ளிகள் உள்ளன. இந்திய அமைப்புகளுக்-கான கூட்டமைப்புக் குழு-என்கிற அமைப்பின் கீழ் இவ்வமைப்புகள் இயங்குகின்றன. இஸ்லாம் அல்லாதவர்களின் மத வழிப்பாட்டுத் தலங்களை அனுமதித்து இருப்பதால் இந்தியர்களால் 5-கிறித்துவ ஆலயங்களும், ஒரு இந்துக் கோவிலும், 3-குருத்துவாராக்களும் கட்டப்பட்டுள்ளன. 22 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில் 2,94,000 இந்தியர்கள் இருக்கிறார்கள். இது குவைத்தின் மக்கள் தொகையில் 13-சதவீதம் ஆகும். குவைத்துதான் மதன்முதலாக இந்தியர்களை வரவழைத்து பணிபுரிவதற்கான முன்மாதிரியை அமைத்துக் கொடுத்த நாடு. இங்கு 100-க்கும் மேற்பட்ட இந்திய பண்பாட்டுக் அமைப்பகள் உள்ளன. மொழி, வட்டாரம், தொழில் மற்றம் நிகழ்வுகள் அடிப்படையில் இக்கழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலிருந்து பிரபலமானவர்களை வரவழைத்தும் அல்லது குவைத் வாழும் இந்தியர்களினைக் கொண்டும் பல பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களை நடத்தவென இந்தியக் கலை வட்டம் என்கிற அமைப்பினா 1,200 பேர் அமர்ந்துக் காணக்கூடிய ஒரு அரங்கை நிர்மாணித்துள்ளனர்;. 9-இந்தியப்பள்ளிகள் இந்திய அரசு அனுமதியுடன் இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் நடத்தப்படுகின்றது.எட்டுத்தலைமுறைகளுக்கு மேலாக சில இந்தியக் குடும்பங்களைக் கொண்ட ஒமானின் மக்கள்தொகை 23 லட்சமாகும்। இங்கு உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 3,11,000. இது இந்நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது 14-சதவீதம் ஆகும். 7-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியர்-களுடன் இந் நாட்டிற்கு தொடர்பு இருப்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.. அரபுநாடுகளில் வெளிநாட்டி-னருக்கு குடியுரிமை வழுங்கும் ஒரே நாடு இதுதான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியுரிமைப்பெற்ற இந்தியர்கள் இங்கு வசிக்-கிறார்கள். தினசரி பூஜை நடத்தக்கூடிய இரண்டு இந்துக் கோவில்கள் தலைநகர் மஸ்கட்டில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு கோவில் நூறு ஆண்டுகள் பழமைக் கொண்டது. 2 குருத்வாராக்கள் 7 கிறித்துவ ஆலயங்கள் உள்ளன. 2,000-த்திற்கும் மேற்பட்ட இந்திய மருத்துவர்கள் இந்நாட்டில் பணிபுரிகிறார்கள். 14-இந்தியப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 25-தனித்தனியான இந்தியப் பண்பாட்டு அமைப்புகள் இயங்கி வருகின்றன. இக்குழுக்கள் எல்லாம் ஓமனின் சட்டப்படி 'இந்தியன் சோஷியல் கிளப்' என்கிற ஒரு அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5,25,000 மக்கள்தொகை-யைக் கொண்ட கத்தரில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 1,30,000 ஆகும். இது அந்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 24 சதவீதம் ஆகும். 1,200 கோடி ரூபாய் வருடாந்திர அந்நிய செலாவனியைத் தரும் இந்நாடு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இந்திய மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற தொழில்துறை வல்லநர்களை கொன்டுள்-ளது. 5-இந்தியப்பள்ளிகள் உள்ளன. இந்திய தூத-ரகத்தால் அனுமதிக்கப்பட்ட 50-இந்திய சமூக-பண்பாட்டு அமைப்புகள் உள்ளன. இவை இந்திய பண்பாட்டு விழாக்களை முன்நின்று நடத்துகின்ற அமைப்புகளாகும்.அமீரகம் என்று தமிழில் அழைக்கப்படும் 1971-ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளான துபாய், அபுதாபி, ஸார்ஜா உள்ளிட்ட நாடுகள் 19-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன் இருவழி உறவு கொண்ட ஒரு நாடாகும்। மோத்த மக்கள் தொகை 29 லட்சம் ஆகும். 9 லட்சம் இந்தியர்கள் இந்நாட்டில் உள்ளனர். இது அந்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 30-சதவீதம் ஆகும். இதுவே வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரும் சதவீதம் ஆகும். சுற்றலாவிற்கான மையமாக இந்நாடு குவிமையப்படத்தப்படுவதால் எண்ணற்ற கண்ணைக்கவரும் கட்டிடங்களையும் பொழுதுபோக்கு பூங்காக்களையும் கொண்டுள்ளது. அழுகுபடத்தப்பட்ட கடற்கரையும், கடல்நடுவில் கட்டப்பட்ட நட்சத்திர ஓட்டல்களும் உலக மக்களைக் கவரும் ஒரு முக்கியமான மையமாக உள்ளது. 30 இந்தியப்பள்ளிகள் உள்ளன. கோவில்கள், குருத்வாராக்கள், கிறித்துவ ஆலயங்கள் உள்ளன. பல பண்பாட்டு அமைப்புகள் செயல்பட்டு வருவதுடன் அவை நிறைய பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.துபாய், ஓமன், கத்;தர், குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளின் தமிழ் சங்கங்களின் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் நிகழ்வுகளை பிரபலப்படுத்தி தொடர்ந்து செய்து வருகின்றன। தமிழகத்திலிருந்து நடிகர்கள், பிரபலமானவர்களைக் கொண்டு இவை நடத்தப்படகின்றன. ஆணால், சவுதியின் நிலமை வேறு. அந்நாடுகளைப்போல பிரபலமாக எதுவம் இங்கு நடத்தப்படுவதில்லை.. பொழுதுபோக்கு நிகழ்வுகளை ஒப்பிட்டால் பிற நாடுகளைவிட சவுதியில் ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதர்சனம். சவுதி தமிழர்களின் வாழ்வை பங்கிட்டுக் கொண்டிருப்பது தொலைக்காட்சிப் பெட்டிகளும், திருட்டு வி.சி.டி-களும், செயற்கைக்கோள் ஆண்டனாக்களும், செல் போன்களும்தான். இந்தியப்பள்ளிகள் வழியாக சில பண்பாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. 2006-ல் சவுதியில் இந்தியர்கள் ஆரம்பித்திருக்கும் மற்றொரு லாபகரமான வியபாரம் இந்தியாவைப்போல தனியார் பள்ளிகள். எண்ணற்ற தனியார் பள்ளிகள் இந்திய குழுந்தைகளக்காக நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகள் சில ஒன்றுகூடல்கள் மற்றும் கலை நிகழ்வுகளை நடத்திவருகின்றன.இதைத்தவிர நிறைய அமைப்புகள் மொழிரீதியாக, வட்டாரரீதியாக, தொழில்ரீதியாக பொதுவானவர்களைக்கொண்டு அமைந்துள்ளன। இவைகள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஈடுபடுவதாகவோ அல்லது தங்களது அமைப்பின் எல்லைக்குள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கானதாகவும் உள்ளன. சில நேரங்களில் இந்தியாவில் நடைபெறும் நிகழ்வகளின் எதிர்விளைவாக சில அமைப்புகள் உருவாக்கப் படுவதுண்டு. உதாரணமாக சுணாமியன்போது சிலநபர்கள் ஒன்றகூடி அமைப்பாக செயல்பட்டு தமிழ் மக்களுக்கு உதவிகளை வசூலித்து அனுப்பியதைக் கூறலாம். இன்றைய வளைகுடா நாடுகள் ஒரு பான்-அரேபிய பண்பாட்டை கொண்டதாக அமைந்துள்ளன. இந்நாடுகள் இஸ்லாமிய மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. இதுவே இந்நாடுகளின் வாழ்தளத்தை தீர்மாணிக்கும் காரணியாக அமைகிறது. வேறுபட்ட பண்பாடுகளையும், வரலாற்றுச் சூழலையும், அரசியல் அமைப்பையும் கொண்ட இந்நாடுகள் பெட்ரோல் மற்றும் இஸ்லாமால் ஒருபடித்தான பண்பாட்டு அமைப்பு போன்ற தோற்றத்தை தருவதாக உள்ளது. 7-ஆம்-நூற்றாண்டில் அரேபியாவில் உருவான இஸ்லாமிய பேரரசு இன்றைய வளைகுடா நாடுகளை உள்ளடக்கி வளர்ந்தது. கிழக்கில் சீனா மற்றும் இந்திய எல்லைகள் முதல் வடக்கில் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கில் ஸ்பெயின் வரை நீண்டுகிடந்த ஒரு பேரரசு. இது அரேபிய பண்பாட்டையும் பிற நாடுகளின் பண்பாட்டையும் கலந்த ஒரு கலப்பு பண்பாட்டை உருவாக்கியது. இக் காலத்தில் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க மற்றும் லத்தின் தத்துவ, விஞ்ஞானம் பற்றிய பல பிரதிகள் ஸ்பெயின் நாடு வழியாக ஐரொப்பியாவிற்கு சென்றது. இப்பிரதிகள் கிரேக்க லத்தின் தத்துவம் பற்றிய அறிமுகங்களை உலகிற்கு வழங்கின. ஒருவகையில், இன்றைய ஐரொப்பிய பண்பாடும் அதன் அடிப்படை சிந்தனைகளான கிரேக்க மற்றும் லத்தின் தத்துவார்த்த உலகப்பார்வைகளும் அரேபிய சமூகங்களின் வழியாகவே சென்றடைந்தன எனலாம். ஸ்பெயின் ஐரொப்பிய அரேபிய பண்பாட்டு கலப்பிற்கான மையமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக வளைகுடா நாடுகளின் வாழ்தளம் மற்றும் வாழ்க்கைச் சூழல் என்பது ஒருபடித்தானது அல்ல। இது பாரிய வேறுபாட்டை இந்நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டினரின் குறிப்பாக இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் வாழ்க்கசை;சூழலில் ஏற்படுத்துவதுடன் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்களது தாய்நாடுகளின் வாழிடத்திலும், அவர்களது மன அமைப்புகளிலும் உருவாக்குகிறது. இன்னும் குறிப்பாக அவர்களது மன அமைப்பை வார்ப்பதில் இது பெரும் பங்கைச் செலுத்துகிறது.ஐரொப்பிய நாடுகளைப்போல இந்நாடுகளில் வாழும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கப்படுவதில்லை। ஓமனில் குடியுரிமை அனுமதித்த போதிலும், அந்நாட்டில் 20-ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் மற்றும் அந்நாட்டைச் செர்ந்த பெண்ணை மணந்திருக்க வேண்டும். குறிப்பாக மற்ற அரபுநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே அது சாத்தியம் என்பதால் இந்தியர்கள் இந்நாடுகளை ஒரு பணம் சம்பாதிக்கும் தற்காலிக குடியிருப்புகளாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் தங்களது; உழைப்பை விற்று ஊதியத்தை முற்றிலுமாக தனது தாய்நாட்டில் சேமிக்கும் ஒரு மனோநிலையே இவர்களிடம் அமைந்துள்ளது. இச்சேமிப்பு மனோபாவம், வாழ்வை ஓரு குறிப்பிட்ட தி;ட்ட அமைப்பிற்குள் வாழ நிர்பந்திக்கிறது. அல்லது தனது இச்சைகளை, ஆசைகளை, வேட்கைகைளை கட்டுப்படுத்தவும், அதனை தள்ளிப்போட்டு அந்த இச்சைகளை தனது தாய்நாட்டில் வாழ்ந்து கொள்ளலாம் என்பதாக வாழ்க்கைக் காலத்தை சம்பாரித்து சேமிப்பதற்க்கானதாகவும், செலவழித்து அனுபவிப்பதற்கானதாகவும் ஆன இரண்டு காலங்களாக பிரித்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது. இந்நிர்பந்தம் மனதை ஓரு பிளவுபட்ட நிலையில் கட்டமைக்கிறது. இப்பிளவு இருவெறுபட்ட சமூக அடையாளங்களுக்குள் இயங்குவதாக அமைகிறது. ஒரு சமூகம் வேட்கைகளை நிறைவு செய்வதற்கானதாகவும், பிறிதொரு சமூகம் வேட்கைகளை ஒடுக்குவதாகவும் அல்லது தள்ளிப்போடுவதாகவும் உள்ளது. பிற நாடுகளில் ஓரளவு இறுக்கமற்ற சூழல் நிலவினாலும், குறிப்பாக சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மற்றும் தமிழருக்கு இது பொறுந்தும். இவர்கள் தாய்நாட்டைப்பொறுத்தவரை ஒரு எதிர்புரட்சிகர பிற்போக்கு சக்திகளாக மாறுவதற்கு இம்மனநிலையே ஒரு காரணமாக அமைகிறது.மதஅடையாளத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இச்சமூகங்களில், இயங்கும் இந்திய உடல்களும் மத அடையாளங்களை உவந்து பெற்றுக்கொள்ளும் ஒரு இயங்கியலை புரிந்துகொள்வது அவசியம்। இங்கு பெறும் மத அடையாளம் இந்திய அரசியலில் ஓரு குறிப்பிடத்தக்க பாதிப்பை உருவாக்குவதாக உள்ளது. குறிப்பாக இந்திய மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு பொருளாதாரரீதியாக உதவக் கூடியவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். தங்களது பண்பாட்டு, மொழி, தேச அடையாளத்தை நிரூபித்துக் கொள்ள இந்திய அரசியலின் பிற்போக்கு சக்திகளை வளர்க்கும் பணியைச் செய்பவர்களாக இருக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் தங்களது அடையாள நெருக்கடியை தீர்த்துக்கொள்ள தனது தாய்நாட்டின்மீது அதீத பற்றைக் கொண்டவர்களாகவும், தாய்நாட்டின் மீது ஒரு விமர்சனமற்ற பார்வையும், அதன் எல்லா பிற்போக்குத்தனங்களையும் ஆதரிக்கும் நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள். இவ்வாறாக, தாய்நாட்டு ஏக்கம் தேசப்பற்றாக பரிணமிக்கிறது. இதன் மற்றொரு விளைவாக இவர்களது மதப்பற்றும் அதிகரிக்கிறது. ஊரில் கோவிலுக்கோ அல்லது பள்ளிவாசலுக்கோ செல்லாதவர்கள்கூட இங்கே தனது இறைவழிப்பாட்டை தீவிரப்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். இந்தியர்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சனை வளைகுடா நாடுகள் சொந்த நாட்டு மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை பயிற்றுவித்து வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கமுயல்வதாகும்। சில நாடுகள் அரசுசார் நிறுவனங்களில் சொந்த நாட்டினரை 100 சதவீதம் பணிக்கு அமர்த்தியிருப்பதுடன், எல்லா தனியார் நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சொந்த நாட்டினரை பணிக்கு வைப்பதை கட்டாயமாக்கி உள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்துவராத நிலையில் பணியடங்களை உள்நாட்டினரைக்கொண்டு நிரப்புவதும், ஓரு தனிப்பட்ட நாட்டினரை அதிகமாக நிரப்பாமல் பல்வேறு நாட்டினரைக்கொண்டு நிரப்புவதும், குறிப்பிட்ட நாட்டினரின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும் ஈடுபட்டுள்ளன. இது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்தியர் என்ற கண்ணோட்டத்தில் இது நம்மை பாதிக்கும் என்றாலும், இதன்மூலமே அந்நாடுகளும் சுயமாக தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்பதுதான் முக்கியம். இதன் தொடர்ச்சியாக இந்நாடுகள் தங்களை ஒர் அரேபிய தேசியமாக வளர்த்துக் கொண்டு, நாடுகளாக உள்ள இவை தேசங்களாக மாறும்போது, அது உலக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் செலுத்துவதாக இருக்கும். அமீரகமயமாக்குதல், சவுதிமயமாதல் என்கிற செயல்பாட்டிற்கான துவக்கம் 2015-ற்குள் முற்றுப்பெருவதற்கான முயற்சிகளில் அமீரகம் மற்றும் சவுதி அரேபியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலை ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு காண்பது போல 2020-ல் இந்திய வல்லரசு நாடாக மாறுவதற்கு முன்பு ஒட்டுமொத்தமாக வளைகுடாவிலிருந்து திரும்பும் இந்தியார்களால், நெருக்கடியைச் சந்திக்குமா? அல்லது வேறு வழிகளில் அதனை சமாளிக்குமா? என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று.-ஜமாலன்01-01-௨00௭
குறிப்பு: இககட்டுரை தமிழ்கொடி என்கிற மலருக்காக எழுதப்பட்டது. உலகின் தமிழர்கள் வாழும் நாடுகளினைப்பற்றிய ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்ட மலர் அது.

படித்ததில் பிடித்தது...!

புறம் பேசுவது, தனது சகோதரனின் உடலின் ஒருபகுதியை உண்பது போல அருவருப்பானது.
-இஸ்லாமிய நெறி.



இது நல்லதல்ல. நியாயமுமல்ல!
சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை....""நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?""அதில்லை...""இதைத் தெரிந்து கொள்ளா விட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?""இல்லை""இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?""அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது."ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?""ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா? இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்து விடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்.