அதிக மைலேஜ் வேண்டுமா?
பைக்குகளில் இருக்கும் கார்புரேட்டர்களில் இரு வகைகள் உள்ளன. அதில் 'டைரக்ட் சிலைடு கார்புரேட்டர்' பற்றி ஏற்கெனவே பார்த்து விட்டோம். இன்னொரு வகை: சிவி கார்புரேட்டர் (Constant Vacuum Carburetor). இது 4 ஸ்ட்ரோக் இன்ஜினில் 125 சிசி-க்கு மேற்பட்ட திறன் கொண்ட பைக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. தடங்கல் இல்லாத இன்ஜின் செயல்பாடு, நல்ல மைலேஜ், மாசுக் குறைவு ஆகியவற்றை மனதில் வைத்தே இதைப் பயன்படுத்துகிறார்கள்.
டைரக்ட் சிலைடு கார்புரேட்டரில், ஆக்ஸிலரேட்டர் கேபிள் காற்றைக் கட்டுப்படுத்தும்
சிலைடில் நேரடியாக இணைக்கப்பட்டு இருக்கும். இதனால், அதிகமாகவோ வேகமாகவோ திராட்டிலை முறுக்கும்போது, பெட்ரோல் விரயமாவதுடன் புகை மாசும் அதிகமாகும். மைலேஜும் அதிகம் கிடைக்காது. ஆனால், மிக அதிகமாக சக்தியை வெளிப்படுத்தும். சிவி கார்புரேட்டரில், திராட்டில் கேபிள் சிலைடுக்குப் பதில் வட்டமான பட்டர்ஃபிளை வால்வில்தான் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த வால்வுதான் காற்று உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்தும். அதாவது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகக் கட்டுப்படுத்தும்.
சிவி கார்புரேட்டரில், காற்று உள்ளே சென்றவுடன் இன்ஜின் வேக்யூமுக்கு ஏற்ப சிலைடை நகர்த்தி பெட்ரோலை உள்ளே அனுப்பும். திராட்டிலைக் குறைக்கும்போதும் சட்டென குறைந்துவிடாமல், இன்ஜின் வேக்யூமுக்கு ஏற்றாற்போலவே குறையும். இந்த முறைதான் தடங்கல் இல்லாத இன்ஜின் செயல்பாடுக்கும், மைலேஜுக்கும், மாசுக் குறைவுக்கும் காரணங்கள். சரி; இனி இதில் என்னென்ன பிரச்னைகள் வரும், அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது, பராமரிப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
1 கார்புரேட்டரை பைக்கைவிட்டு அகற்றும்போது, சோக் கேபிள், திராட்டில் பொசிஷன் சுவிட்ச், வேக்யூம் சர்க்யூட் ஆகியவற்றை கவனமுடன் அகற்றுங்கள். சில பைக்குகளில் எலெக்ட்ரானிக் சோக் இருக்கும். அது சீராக இயங்குகிறதா, சோக் பொசிஷன் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.
2 கார்புரேட்டரின் கீழ்ப் பகுதியின் ஸ்குரூக்களை அகற்றி பவுலைத் திறக்கவும். 'ஓ' ரிங் நல்ல நிலையில் இருக்கிறதா எனப் பார்க்கவும். மேலும், பவுலில் உள்ள பெட்ரோல் சுத்தமாக இருக்க வேண்டும். படத்தில் உள்ளது போல அழுக்காகி இருந்தால், பெட்ரோல் டேங்க் துருப் பிடித்து சுத்தமாக இல்லாமலும், தரமற்ற பெட்ரோலும் காரணங்களாக இருக்கும்.
3 ஃப்ளோட் நீடிலை அகற்றுவதற்கு, கவனமாக ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்த வேண்டும். இதை அகற்றிய பின்புதான் ஃப்ளோட், ஜெட் நீடில் வரும். மெயின் ஜெட்டுடன் இருக்கும் எமல்ஸிஃபயர் மற்றும் ஸ்லோ ஸ்பீட் ஜெட்டை கவனமாக அகற்றவும்.
4 கார்புரேட்டரின் மேல் பகுதியில் உள்ள வேக்யூம் சிலைடை விரல்விட்டு உயர்த்திப் பார்க்கவும். விரலை எடுத்தால், தானாக சிலைட் கீழே இறங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதைச் சுத்தம் செய்யுங்கள். சிலைடு சரியாக இயங்கவில்லை என்றால், பைக்கின் பர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படும்.
5 பட்டர்ஃபிளை வால்வ் சரியாக இயங்குகிறதா என பார்க்க வேண்டும். அதாவது, திராட்டில் ரோட்டரைக் கையால் இயக்கும்போது, பட்டர்ஃபிளை சிலைடு ஸ்மூத்தாகத் திறந்து மூட வேண்டும். அப்படி மூடவில்லை என்றால், அந்த சிலைடில் உள்ள சாஃப்ட்டில் கார்பன் படிந்திருக்கும். எனவே, அதை ஸ்ப்ரே பயன்படுத்தி ப்ரெஷ் வைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.
6கார்புரேட்டரின் மேல் பகுதியில் உள்ள ஸ்குரூக்களைத் தளர்த்தி கவனமாகத் திறக்கவும். அதில் ஸ்ப்ரிங் மற்றும் வேக்யூம் சிலைடு டயபராமுடன் இருக்கும். இவற்றை அகற்றும்போது டயபராம் சேதமடையாமல் கவனமாக இருக்க வேண்டும். இதில் சிறு துளை விழுந்தால்கூட புதிதாக மாற்ற வேண்டும்.
7 டயபராம் சிலைடை ஸ்ப்ரே பயன்படுத்தி காட்டன் துணியால் சுத்தம் செய்யவேண்டும். இதில் கீறல் விழாமல் சுத்தம் செய்வது அவசியம்.
8 மெயின் ஜெட், ஸ்லோ ஸ்பீட் ஜெட் மற்றும் கார்புரேட்டர் சர்க்யூட் ஆகியவற்றை ஸ்ப்ரே கொண்டு அனைத்தையும் நன்றாகச் சுத்தம் செய்து பொருத்துங்கள். எப்படி அகற்றினோமோ, அதே ஆர்டரில் மீண்டும் அசெம்பிள் செய்து பைக்கில் பொருத்துங்கள்.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக