ஏன், எதற்கு, எப்படி?
''மியூச்சுவல் ஃபண்ட்னா என்ன, தெரியுமா?''
''இந்த சீட்டு போடற மாதிரிதானே?''
''ஃபைனான்ஸ் கம்பெனிங்க...''
''கேள்விப்பட்டிருக்கேன், ஆனா கரெக்டா அது என்னனு சொல்லத் தெரியல!''
பலபேரிடம் கேட்டபோது இப்படித்தான் பதில் கிடைத்தது. இவ்வளவுக்கும் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட எட்டு லட்சம் கோடி ரூபாய்!
ஆச்சரியப்படற அளவுக்கான தொகைதான் அது என்றாலும் கூட, இன்னும் பரவலான மக்களை அது போய்ச் சேரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட்டில் பணத்தைப் போட்டு, லாபத்தை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ருசியை எல்லோரும் அனுபவிக்க வேண்டும், பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கட்டுரை... மியூச்சுவல் ஃபண்ட் பற்றி ஏற்கெனவே அறிந்தவர்கள் இதை 'ஸ்கிப்' செய்துவிட்டு மற்ற பகுதிக்கு சென்றுவிடவும்...
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்டை நிர்வகிப்பதற்காகவே பல நிறுவனங்கள் இருக்கின்றன. இவை பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியைத் திரட்டி, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. அப்படி முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தையோ அல்லது நஷ்டத்தையோ முதலீட்டாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி நிர்வகிப்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கமிஷனாக எடுத்துக் கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் 'செபி'யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.
எதற்காக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும்?
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வராமலா போய்விடும்? அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஒரு காலம் என்றால், இப்போது இந்தியா சீனா ஆகிய நாடுகளின் காலம். இந்த இரண்டு நாட்டின் பொருளாதாரம் மிகச் செழிப்பாக வளரும் என்று நிபுணர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் அப்படிப்பட்ட காலத்தில் சம்பளங்கள் உயரும், விலைவாசிகளும் (பணவீக்கம்) உயரும். அப்படி பணவீக்கம் உயரும்போது, நமது சேமிப்புகளுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகமாக இருந்தால்தான் சமாளிக்க முடியும். அதற்கு பங்கு சார்ந்த முதலீடுகள்தான் ஏற்றது. அப்படி பங்குகளில் செய்யும் முதலீட்டுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு சிறந்த கருவி.
இதுவரை இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களின் செயல்பாடு எப்படி?
மிக மிக அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்! கடந்த ஐந்து வருடங்களில் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் ஆண்டொன்றுக்கு 28%-க்கு மேல் வருமானத்தைத் தந்துள்ளன. அதேபோல் எஸ்.ஐ.பி. முறையில் கடந்த 10 வருடங்களில் முதலீடு செய்திருந்தாலும், ஆண்டொன்றுக்கு 28%-க்கு மேல் வருமானத்தை பல நல்ல திட்டங்கள் தந்துள்ளன. இந்த அளவுக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகம் என்றால்கூட, ஆண்டொன்றுக்கு நீண்டகால அடிப்படையில் 12 - 15% வருமானத்தைத் தாராளமாக எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. தேர்ந்தெடுத்த ஒரு சில திட்டங்களில் பதினான்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று 42 லட்சத்துக்கும் மேல்! இருப்பினும் சந்தையின் செயல்பாட்டைவிட மிக மோசமாக செயல்பட்ட திட்டங்களும் இருக்கின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது.
மியூச்சுவல் ஃபண்ட்டில் எப்படி முதலீடு செய்வது சிறந்தது?
மியூச்சுவல் ஃபண்ட்களில் பங்கு, கடன், மற்றும் இரண்டும் சார்ந்த திட்டங்கள் என பலவகை இருந்தாலும், இங்கே நாம் எடுத்துக் கொள்ளப்போவது பங்கு சார்ந்த திட்டங்களைத்தான். பங்கு சார்ந்த முதலீடுகள் அதிக ரிஸ்க் உடையது. ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது ரிஸ்க் மிகவும் குறைவு. அதனால் சிறு முதலீட்டாளர்கள் தங்களுடைய நீண்ட நாள் தேவைகளுக்காக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. அப்படி முதலீடு செய்யும் பணம் இடையில் தேவைப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பொதுவாக எஸ்.ஐ.பி. முறையில் மாதாமாதம் முதலீடு செய்வது ரிஸ்க்கை கணிசமாகக் குறைக்கும்.
நம்முடைய ஒவ்வொரு தேவைக்காகவும் குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து, ஒன்று அல்லது இரண்டு ஃபண்டை தேர்வுசெய்து முதலீடு செய்து வரலாம். நாம் நிர்ணயித்த தொகையை அடைந்தவுடன், முழுவதுமாக பங்கு சார்ந்த திட்டங்களில் இருந்து வெளியேறி, நிரந்தர வருமானம் தரக்கூடிய கடன் சார்ந்த திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதுபோன்ற சேமிப்பை குறிக்கோள் சார்ந்த சேமிப்பு/ முதலீடு என்பார்கள். இளவயதினர் பலருக்கும் இதுபோன்ற முதலீடு பொருந்தும். அவ்வாறு முதலீடு செய்யும்போது 'குரோத் ஆப்ஷன்' என்று சொல்லக்கூடிய வளர்ச்சிப் பாதையிலேயே செல்லலாம். 25 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்டவர்கள் அவ்வாறு முதலீடு செய்யும்போது, தங்களது முதலீட்டில் 75% முதல் 50% வரை பங்கு சார்ந்த முதலீடுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். மீதியை வேறு முதலீட்டுகளில் திசை திருப்பலாம்.
எத்தனை ஃபண்ட்களில்/ ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்?
பல பேர்கள் தாங்கள் கேள்விப்படும் ஃபண்ட்களில் எல்லாம் முதலீடு செய்துவிடுவார்கள். கடைசியில் அதுவே ஒரு பெரிய தலைவலி ஆகிவிடும்! நமது போர்ட்போஃலியோவில் ஃபண்ட்களின் மற்றும் ஃபண்ட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நமது வேலைப்பளு கூடும், கவனம் சிதறும், மேலும் மொத்த முதலீட்டின் வருமானமும் குறைய வாய்ப்புள்ளது. நிறைய ஃபண்ட்களில் முதலீடு செய்வதால் மட்டுமே ரிஸ்க்கும் குறைந்து விடாது. அதனால் நல்ல ஃபண்ட் நிறுவனங்களாக நான்கு அல்லது ஐந்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்குள்ளேயே முதலீடு செய்வது நல்லது. அதேபோல் முதலீடு செய்யும் ஃபண்ட் திட்டங்களின் எண்ணிக்கையையும் ஒரு வரையறைக்குள் வைத்திருப்பதுதான் நல்லது. நீங்கள் ஒரு சிறிய முதலீட்டாளர் என்றால் 2 - 4 திட்டங்களிலும், நடுத்தர முதலீட்டாளர் என்றால் 6 - 8 திட்டங்களுக்கு மிகாமலும், பெரிய முதலீட்டாளர் என்றால் 10 - 12 திட்டங்களுக்கு மிகாமலும் பார்த்துக் கொள்வது நன்று.
ஃபண்டை எப்படி தேர்வு செய்வது?
இந்தியாவில் இன்று கிட்டத்தட்ட 40 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளன. அவை நிர்வகிக்கும் திட்டங்கள் நூற்றுக்கணக்கானவை. நீங்கள் நல்ல ஃபண்ட்களைத் தேர்வு செய்வதற்கு கீழ்கண்ட ஃபில்ட்டர்களை அப்ளை செய்யலாம். இதுவே முடிவானதல்ல, நீங்களே கூட இன்னும் சில ஃபில்ட்டர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
1. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருந்துள்ளவை.
2. தனிப்பட்ட திட்டங்களின் அஸட் சைஸ் 500 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பவை.
3. ஃபண்ட் ஹவுஸின் அஸட் சைஸ் (மொத்தத் திட்டங்களின் கூட்டு மதிப்பு) மீடியனுக்கு மேல் இருத்தல் வேண்டும் (இன்றைய நிலையில் ரூ 8,000 கோடிக்கு மேல்).
4. ஜெயன்ட் மற்றும் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகள் அதிகமாக இருப்பவை.
5. கடந்த ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட கால கட்டங்களில் சென்செக்ஸ்/ நிப்டி 50 குறியீடுகளைவிட அதிகம் வருமானத்தைத் தந்துள்ளவை.
6. ரேட்டிங் கொடுக்கப்பட்ட திட்டங்களில் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.
7. ஓப்பன் எண்டட் திட்டங்களாக இருப்பது நல்லது.
பயப்படாதீர்கள்!
ஏமாற்றிவிட்டு ஓடிவிடும் லோக்கல் ஃபைனான்ஸ் கம்பெனிகளோடு ஃபண்ட் நிறுவனங்களை ஒப்பிட்டு பல பேர்கள் பயந்துகொண்டிருக்கிறார்கள்! ஆனால் உண்மை அப்படி இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன. அவற்றால் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட முடியாது. மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளை இந்தியாவிலும் உலகளவிலும் உள்ள பல தலைசிறந்த நிறுவனங்கள்தான் நடத்தி வருகின்றன. மற்ற அனைத்தையும் சரியாக தேர்ந்தெடுத்துவிட்டால் முதலீட்டாளர் எடுக்க வேண்டிய ரிஸ்க் என்பது சந்தை ரிஸ்க் மட்டும்தான். உங்கள் பணத்தைப் போடுவதற்கு முன்பு நன்றாக ஹோம்வொர்க் செய்து முதலீடு செய்தால் பலன் நிச்சயம். பயத்தால் பலனை இழந்து விடாதீர்கள்!
ஃபண்ட் டிக்ஷ்னரி
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளராவது என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில வார்த்தைகளை அடிக்கடி கேட்க வேண்டியதிருக்கும். அப்படிப்பட்ட சில சொற்களும் அதற்கான விளக்கமும்...
யூனிட் - மியூச்சுவல் ஃபண்ட்களை விற்கும் அளவு யூனிட் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு யூனிட்டின் முகமதிப்பு ரூ 10 ஆகும். முதன்முதலாக வெளிவரும்போது 10 ரூபாய்க்கே விற்பனையாகும். பிற்காலங்களில் அந்த ஒவ்வொரு யூனிட்டின் மதிப்பும், அந்த திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து முகமதிப்பைவிட கூடவோ குறையவோ செய்யும்.
என்.ஏ.வி - என்.ஏ.வி என்பது 'நெட் அஸட் வேல்யூ' ஆகும். ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் ஒரு தேதியில் உள்ள மொத்த சொத்துக்களை அதன் கடன்களில் இருந்து கழித்தபிறகு வரும் தொகையை, அன்றைய தேதியில் உள்ள யூனிட்டுகளால் வகுத்து வருவதுதான் என்.ஏ.வி. ஆகும்.
ஓப்பன் எண்டட் ஃபண்ட் - ஓப்பன் எண்டட் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் யூனிட்டுகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதுவரை நன்றாகச் செயல்பட்டுள்ள பலதிட்டங்கள் ஓப்பன் எண்டட் வகையைச் சார்ந்தவையே.
குளோஸ் எண்டட் ஃபண்ட் - இவ்வகையைச் சார்ந்த திட்டங்களில் குறிப்பிட்ட வருடங்களுக்கு புதிதாக வாங்கவோ விற்கவோ முடியாது. இவ்வகையைச் சார்ந்த திட்டங்கள் பல இந்தியாவில் சிறப்பாகச் செயல்படவில்லை.
டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட் - இத்திட்டங்கள் அனைத்து துறைசார்ந்த பங்குகளிலும் தங்களது முதலீட்டை மேற்கொள்ளும். இத்திட்டங்களின் ரிஸ்க், சந்தை ரிஸ்க்கை ஒட்டி அமையும்.
செக்டோரல் ஃபண்ட்ஸ் - இத்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் தங்களது முதலீட்டை மேற்கொள்ளும். டைவர்ஸிஃபைடு திட்டங்களைவிட இத்திட்டங்களுடைய ரிஸ்க் அதிகம்.
லார்ஜ் கேப் திட்டங்கள் - பெரிய நிறுவனப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் திட்டங்கள்.
மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்கள் - நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்கள்.
என்ட்ரி லோட் - யூனிட்டுகளை வாங்கும்போது முதலீட்டாளர் செலுத்த வேண்டிய கட்டணம். இக்கட்டணம் இன்றைய நிலையில் முழுவதுமாக செபியால் அகற்றப்பட்டுவிட்டது.
எக்ஸிட் லோட் - யூனிட்டுகளை விற்கும்போது முதலீட்டாளர் செலுத்த வேண்டிய கட்டணம். ஓப்பன் எண்டட் திட்டங்கள் அனைத்திலும் முதலீடு செய்த ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் 1% வசூலிக்கப்படுகிறது. அதற்குமேல் வெளியேறும்போது எக்ஸிட் லோட் எதுவும் இல்லை.
வியாழன், 11 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக