வியாழன், 11 பிப்ரவரி, 2010

தொழில் ஐயங்கள்

ரெண்டுல ஒண்ணு சொல்லுங்க?
''எங்கள் குடும்பம் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளது. நான் 15 வருடம் அங்கேயே வேலை பார்த்தேன். பிறகு நான் யூ.பி.எஸ். உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று விட்டேன். இப்போது அந்தத் தொழிலில் ஐந்து வருடம் எனக்கு அனுபவம் இருக்கிறது. இப்போது சொந்தமாக பிஸினஸ் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். மேலே சொன்ன இரண்டு தொழிலிலும் எனக்கு அனுபவம் இருப்பதால் எந்த பிஸினஸ் ஆரம்பிக்கலாம் என்பதில் குழப்பமாக உள்ளது. நீங்கள்தான் எனக்கு சரியான தீர்வை வழங்கவேண்டும்.''
பி.ராஜேந்திரகுமார், மதுரை.
ஆர்.எஸ்.வீரவல்லி. பேராசிரியர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட்.
பிஸினஸில் அனுபவம் இருந்தால் மட்டும் போதாது, அதைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவைப்படும். எந்த பிஸினஸ் செய்வதாக இருந்தாலும் விடாமுயற்சி, மனஉறுதி, ரிஸ்க் எடுக்கும் தைரியம் இவை மூன்றும் கண்டிப்பாகத் தேவை. உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்யுங்கள். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்களுக்கு 7-க்கு கீழ் வாங்கினால் உங்களுக்கு பிஸினஸ் சரிப்படாது. இவற்றில் ஏழு மதிப்பெண்களுக்கு மேலே வாங்கினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையைப் பூர்த்தி செய்யுங்கள்.
விடாமுயற்சி, மனஉறுதி, ரிஸ்க் எடுக்கும் தைரியம் இதெல்லாம் அடிப்படைக் குணாதிசயங்கள். பிஸினஸ் என்று வரும் போது எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக் கிறீர்களோ அந்தத் தொழிலுக்கான எதிர்காலம், போட்டி யாளர்கள் இவற்றை ஆராய வேண்டும். இவை ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் போடுங்கள். அதே போல உங்களுக்கு அந்த இரண்டு தொழில்களில் எந்தளவுக்கு திறமை, அனுபவம், ஆர்வம், ஆதாரம் இருக்கிறது என்பதையும் அறிந்து அதற்கேற்ப மதிப்பெண் போடுங்கள். (குறைந்தபட்ச மதிப்பெண் 0, அதிகபட்சம் 10)
நீங்கள் சுயபரிசோதனை செய்துகொள்வது மட்டுமல்லாமல் உங்களைப் பற்றி நன்கறிந்த, பிஸினஸ் பற்றி ஓரளவு தெரிந்த நபர்களிடம் கொடுத்து உங்களை மதிப்பீடு செய்யச் சொல்லுங்கள்.
இதில் இருந்து கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் எந்தத் தொழிலுக்கு அதிக மதிப்பெண் வருகிறதோ அந்த பிஸினஸை தேர்ந்தெடுக்கலாம். இதை உங்களையே செய்யச் சொல்வதன் நோக்கம் எல்லா விஷயங்களையும் பற்றி தெரிந்த பிறகு பிஸினஸில் இறங்க வேண்டும் என்பதற்காகத்தான்.
100 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட பயோடீசல் பிளான்ட் ஒன்றை அமைக்கலாம் என்று இருக்கிறேன். இதற்கு எவ்வளவு செலவாகும்? அரசு மானியம் எதாவது உண்டா?
மோகன், கோயம்புத்தூர்.
வெங்கடாசலம், பேராசிரியர் மற்றும் தலைவர்,உயிராற்றல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை.
250 முதல் 300 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட இயந்திரங்களைத்தான் வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. ஆனால் இதைத் தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு டன் பிழியலாம் என்ற அளவில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயோடீசலைத் தவிர புண்ணாக்கும் கிடைக்கும். இந்த மொத்த அமைப்புக்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். 100 லிட்டர் உற்பத்தித் திறன் என்றால் இன்னும் குறைவாகவே செலவாகும். இதற்கு அரசு மானியம் எதுவும் வழங்கவில்லை.
தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் பயோடீசலுக்கு 26 ரூபாய் என்று அரசு நிர்ணயித்துள்ளது. அதனால் இப்போது பெரிதாக லாபம் இல்லை. ஆனால் மற்ற நாடுகள் பயோடீசலுக்கு பிரீமியம் விலையை நிர்ணயித்துள்ளது. இந்தியாவும் பயோடீசல் விலையை 34 ரூபாயாக அறிவிக்கலாம் என்று செய்திகள் வருகின்றன. அப்படி விலையை உயர்த்தும்போது இது லாபகரமான பிஸினஸ்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக