வியாழன், 11 பிப்ரவரி, 2010

முதலீடு ஆலோசனை

நான் 5 ஸ்டார் ஃபண்ட் ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். அந்த ஃபண்ட் தற்போது 2 ஸ்டார் ஃபண்டாக உள்ளது. நான் அந்த ஃபண்டை என்ன செய்யலாம்?
- பிரகாஷ், லால்குடி.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது வெறும் ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே வைத்து தேர்ந்தெடுப்பது அவ்வளவு நல்லதல்ல. அந்த ஃபண்டின் ஐந்தாண்டு மற்றும் அதற்கு மேலும் உள்ள வருமானம், ஃபண்ட் ஹவுஸ் மற்றும் அத்திட்டம் நிர்வகிக்கும் தொகை, ஃபண்ட் மேனேஜரின் அனுபவம் போன்ற பலவற்றையும் மனதில் வைத்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்தெடுத்த பிறகு, வருடத்துக்கு ஒரு முறையாவது நாம் செய்திருக்கும் முதலீட்டின் செயல்பாட்டினை கவனிக்க வேண்டும். சில நல்ல ஃபண்டுகள்கூட சில நேரங்களில் சுமாராக செயல்படும். அதற்காக உடனடியாக அந்த ஃபண்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நீண்ட கால செயல்பாட்டை வைத்து ஃபண்டை மாற்றலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.
பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது குரோத், டிவிடெண்ட் ரிஇன்வெஸ்ட்மென்ட், அல்லது டிவிடெண்ட் பேஅவுட் இவற்றில் எந்த ஆப்ஷனுக்குச் செல்லலாம்?
- உமா கணேசன், கடலூர்.
எந்த ஆப்ஷனில் செல்லலாம் என்பது ஒருவருடைய வயது மற்றும் தேவைகளைப் பொறுத்தது. இளைஞர்கள், சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள், உடனடியாகப் பணம் தேவைப்படாதவர்கள், நீண்டநாள் லட்சியங்களுக்காக முதலீடு செய்பவர்கள் குரோத் ஆப்ஷனுக்குச் செல்லலாம். முதியோர்கள், பணம் தேவைப்படுபவர்கள், தங்களது முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை குறைத்துக் கொள்ள விரும்புபவர்கள் டிவிடெண்ட் பேஅவுட் ஆப்ஷனுக்குச் செல்லலாம். டிவிடெண்ட் ரிஇன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷனில் எந்தவித சிறப்பம்சமும் இல்லை. அதனால் அதைத் தவிர்த்துவிடலாம். கடன் சார்ந்த திட்டங்களுக்கு உள்ளது போல், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு டி.டி.டி (DDT – Dividend Distribution Tax) என்று கூறப்படும் வரி கிடையாது. ஆகவே எந்த ஆப்ஷனுக்குச் செல்லலாம் என்பது அவரவர்களுடைய தேவையைப் பொறுத்தது.
எங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகிறது. அவளின் கல்லூரி மற்றும் திருமணச் செலவுகளுக்காக சேமிக்க விரும்புகிறோம். எவ்வாறு சேமிக்கலாம்?
- மஞ்சுளா, கும்பகோணம்.
இன்னும் 16 ஆண்டுகள் கழித்து வரக்கூடிய செலவுக்காக இப்போதே சேமிக்க விரும்புகிறீர்கள்... இவ்வளவு நீண்ட காலத் தேவைகளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எஸ்.ஐ.பி. முறையில் சேமிப்பது, வேறு எந்தவிதமான முதலீட்டையும்விட (இன்ஷூரன்ஸ் உள்பட) சிறந்தது. பெற்றோரின் பான் கார்டை வைத்தே குழந்தையின் பெயரில் முதலீட்டைச் செய்யலாம். நீண்ட காலம் என்பதால் மிட்கேப் ஃபண்ட்களில்கூட முதலீடு செய்யலாம். குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது முதலீட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது ஒரே தடவையில் முதலீடு செய்வது நல்லதா அல்லது மாதா மாதம் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வது நல்லதா?
- செல்வசுந்தரம், தென்காசி.
பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் மாதாந்திர முறையில் முதலீடு செய்வதுதான் சிறந்தது. இதில் ரிஸ்க் குறைவு - அதே சமயத்தில் முதலீட்டு ஒழுக்கமும் இருக்கும். ஒரே தடவையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக எஸ்.டி.பி. (STP – Systematic Transfer Plan) முறையில் முதலீடு செய்யலாம். இதில் ரிஸ்க் இல்லாத கடன் திட்டத்தில் மொத்த பணத்தையும் போட்டு விட்டு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்கு சார்ந்த முதலீட்டுக்கு மாற்றி விடலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கு அடிப்படையில் என்னென்ன தேவை?
- ரவிபாரதி, ராணிப்பேட்டை.
மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது மிகவும் சுலபம். பான் கார்டும், பேங்க் அக்கவுன்ட்டும் இருந்தால் போதுமானது. மைக்ரோ எஸ்.ஐ.பி. (வருடத்துக்கு 50,000 ரூ. கீழ்) மூலம் முதலீடு செய்தால் பான் கார்டு கூடத் தேவையில்லை. ஏதாவது ஒரு அரசாங்க அடையாள அட்டை இருந்தால் போதுமானது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர்கள் இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாமா?
- வின்சென்ட் ராஜ், சிங்கப்பூர்.
தாராளமாகச் செய்யலாம். இந்திய மக்களைப் போல அவர்களுக்கும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு போன்றவை தேவை.
நான் ஒரு சிறிய முதலீட்டாளர். துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாமா?
- மாணிக்கம், புவனகிரி.
சிறிய முதலீட்டாளர்கள் துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். துறை சார்ந்த திட்டங்கள் டைவர்ஸிஃபைடு திட்டங்களைவிட அதிக ரிஸ்க் உடையது. டைவர்ஸிஃபைடு திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது முதலீட்டாளர்கள் சந்தை ரிஸ்க்கை மட்டும்தான் ஏற்றுக்கொள்கிறார்கள். துறைசார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது சந்தை ரிஸ்க்குடன் சேர்ந்து துறை சார்ந்த ரிஸ்க்கையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு துறை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது மொத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் 20 - 30%-க்குள் இருப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக